கொழும்பு: நமது அண்டை நாடான இலங்கையில் 2022ம் ஆண்டு நடந்த பொருளாதார நெருக்கடிக்கு பிறகு நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசா மற்றும் தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயகே உள்பட மொத்தம் 38 வேட்பாளர்கள் களமிறங்கினர். ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும் அதிபர் தேர்தலில் சுயேச்சையாக தான் போட்டியிட்டார்.
மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் தேர்தலில் வாக்களித்தனர். சுமார் 75% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர்.
தற்போதைய நிலவரப்படி அநுர குமார திசாநாயக்கே 15,70,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மொத்தம் 44.12% வாக்குகளை அவர் அறுவடை செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித்பிரேமதாசா 10,76,209 வாக்குகளை பெற்று 2வது இடத்தில் இருந்து வருகிறார். அவர் 30.23% வாக்குகளை பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே 5,63,054 (15.82%) வாக்குகளை பெற்று 3வது இடத்தில் உள்ளார். அநுர குமார திசாநாயகே பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அவர் இலங்கையின் அடுத்த அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி மக்களின் நம்பிக்கையை பெற்று இலங்கை அதிபர் பதவியை அலங்கரிக்க உள்ள இந்த அநுர குமார திசாநாயகே யார்? என்பது குறித்து இப்போது காண்போம். 55 வயதான இவர் ஏகேடி என்று அழைக்கப்பட்டு வந்தார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மக்கள், யார் அநுர குமார திசாநாயகே? என்று கேட்டாலும், இவர் இலங்கை அரசியலுக்கு புதியவர் அல்ல. இவர் 1968ம் ஆண்டு இலங்கையின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை கூலித்தொழிலாளி. பள்ளியில் படிக்கும்போதே அரசியல் மீது பெரும் ஈர்ப்பு கொண்ட அநுர குமார திசாநாயகே, தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார்.
பின்னர் 1987ம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்தார். 1995ம் ஆண்டு கட்சியின் மத்திய செயற்குழுவில் நியமிக்கப்பட்டார். 2000 மற்றும் 2001ம் ஆண்டு ஜேவிபியின் தேசியப் பட்டியலில் இருந்து எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் SLFP -JVP கூட்டணி ஆட்சியில் கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக திசாநாயகே பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட திசாநாயகே, சுமார் 4,18,553 வாக்குகளைப் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு சென்றது. அங்கு வாழவே வழி இல்லாததால் சிலர் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு அதிகளாக தஞ்சம் புகுந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கடுமையாக போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அரசுக்கு எதிரான இலங்கை மக்களின் கொந்தளிப்பை அநுர குமார திசாநாயகே நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
அப்போது 'சிங்களர்களுக்கான போராட்டம்' (Sinhalese for struggle) என்ற பெரும் போராட்ட இயக்கத்தை முன்னெடுத்த திசாநாயகே, இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அரசின் திறமையற்ற நிர்வாகம், ஊழல் ஆகியவற்றை மக்கள் மனதில் அழுத்தமாக பதியச்செய்து முடிவில் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய பெரும் பங்கு வகித்தார். மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் உணவு, சுகாதார சேவைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கல்விச் சேவைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான மதிப்பு கூட்டு வரிகளை நீக்க வேண்டும், பெரிய செல்வந்தர்கள், தொழில் அதிபர்களின் வணிக சேவைகளுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தார்.
தனது இடதுசாரி சிந்தனை மூலம் பொருளாதார நெருக்கடி நிலையில், போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு எதிராக புரட்சி செய்ததால் தற்போது மக்களின் நம்பிக்கையை பெற்று அதிபராக பதவியேற்க உள்ளார் அனுர குமார திசநாயகே.