Tirupati Hundi Theft Case : திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் கை வைத்த கில்லாடி.. 100 கோடிக்கு சொத்துக்கள்.. சிக்கியது எப்படி?

Tirupati Hundi Theft Case : இந்தியாவின் பணக்கார கோவிலான ஏழுமலையான் கோவிலில் உண்டியல் பணத்தை திருடியே ரூ.100 கோடி வரைக்கும் சொத்து சேர்த்திருக்கிறார் ஒரு ஊழியர். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல வசமாக சிக்கிக் கொண்ட அந்த நபரிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

Aug 6, 2024 - 10:22
Aug 6, 2024 - 12:48
 0
Tirupati Hundi Theft Case : திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் கை வைத்த கில்லாடி.. 100 கோடிக்கு சொத்துக்கள்.. சிக்கியது எப்படி?
Tirupati Hundi Theft Case in Tamil

Tirupati Hundi Theft Case : திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானுக்கு பல லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன. நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானுக்கு சொத்துக்களை காணிக்கையாக வழங்குகின்றனர். கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் தங்கம், வெள்ளி, வைர நகைகள், கோடி கோடியாக பணத்தையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

தனது திருமணத்திற்காக குபேரனிடம் வாங்கிய கடனுக்காக கலியுகம் முடியும் வரை ஏழுமலையான் வட்டி கட்டுகிறார் என்பது ஐதீகம்.ஏழுமலையான் கடனை அடைக்கவே பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் இந்தியாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கோயிலாக இருந்து வருகிறது. இதன் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இங்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தினசரியும் 5 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. மாதந்தோறும் 150 கோடி ரூபாய் வருமானமும் ஆண்டுக்கு ரூ.1,300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானமும் கிடைக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கிடைத்த காணிக்கையின் மதிப்பு ரூ,1,398 கோடி ஆகும்.

ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு என்று ஊழியர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு ஊழியர்தான் பணத்தை திருடி கோடி கோடியாக  சொத்து சேர்த்திருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற ஊழியர் கடந்த ஆண்டு இறுதியில் காணிக்கை பணம் எண்ணும் பணியில் இருந்து வெளியே வந்த போது அவரது நடையில் மாற்றம் ஏற்பட்டது. அதைப்பார்த்து விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்திய போது ரவிக்குமார் தனது ஆசனவாயில் அமெரிக்க டாலரை சொருகியிருந்தார்.


ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளி வந்தன. உண்டியல் பணத்தை தினந்தோறும் திருடி ரூ.100 கோடி மதிப்பில் சொத்துக்களை சேர்த்துள்ளார்.  வீடு, நிலம் மற்றும் தோட்டம் ஆகியவற்றை வாங்கியதை ஒப்புக் கொண்டார் ரவிக்குமார்.
இதனையடுத்து தேவஸ்தானம் இந்த விவகாரத்தை லோக் அதாலத்திற்கு கொண்டு சென்று சொத்துக்களை நன்கொடையாக எழுதிவாங்கியுள்ளது. 
இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.


அண்மையில் ஆந்திர மேல்சபை உறுப்பினர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ஆந்திர சட்ட மேல்சபையில் இந்த முறைகேடு குறித்து அமைச்சர் பேசியதை அடுத்து, இத்தனை காலமாக வெளியில் தெரியாமல் இருந்த இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உண்டியல் பணம் எண்ணக்கூடிய பரக்காமணி கூடம் ஏழுமலையானின் மூலஸ்தானமான ஆனந்த நிலையத்திற்கு அருகில் இருக்கிறது. அதிநவீன துல்லியமாக தெரியக்கூடிய சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டிருக்கும். மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கும் இந்த இடத்தில் இருந்து பல ஆண்டுகாலம் பணத்தை திருடி சிக்கியுள்ளார் ரவிக்குமார். தனது காணிக்கை பணத்தை பல ஆண்டுகாலம் திருடிய நபரை சிக்க வைத்து சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டார் ஏழுமலையான். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow