ஆவணி மூலம் திருவிழா.. மதுரையில் சிவபெருமானின் திருவிளையாடலை பார்க்க ரெடியா? - முழு விபரம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா 19 நாட்கள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை ஆவணி மூலத் திருவிழா நடைபெற உள்ளது.

Aug 20, 2024 - 18:02
Aug 30, 2024 - 22:26
 0
ஆவணி மூலம் திருவிழா.. மதுரையில் சிவபெருமானின் திருவிளையாடலை பார்க்க ரெடியா? - முழு விபரம்
aavani moolam festival madurai

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூல திருவிழா வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. அன்று முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை இரண்டாம் பிரகாரத்தில் காலை மற்றும் இரவு சுவாமி சந்திரசேகர் வீதி உலா நடைபெறும்.

மதுரையம்பதியில் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் 12 சிறுவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய அம்சங்களாக அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.செப்டம்பர் 5ஆம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 6ஆம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய திருவிளையாடலும், 7ஆம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும்,8ஆம் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும் நடைபெறும். 9ஆம் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், 10ஆம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடைபெற உள்ளது.11ஆம் தேதி காலை வளையல் விற்ற திருவிளையாடலும் அன்று மாலை 6 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் 12ஆம் தேதி நரியை பரியாக்கிய திருவிளையாடலும் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடக்கிறது. அன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் திருக்கோவிலில் இருந்து புறப்பாடாகி ஆரப்பாளையம் புட்டு தோப்புக்கு சென்று அங்கு புட்டு உற்சவம் நடைபெற்று இரவு 9 மணி அளவில் எழுந்தருளி திருக்கோவில் வந்து சேர்த்தியாவார்.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த படலம் வைகை ஆற்றங்கரையிலுள்ள அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயிலில்  தான் நடைபெற்றது. வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரை நகர் முழுவதும் அலைக்கழித்தது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென அரிமர்த்தன பாண்டியன் உத்தரவிட்டான். இச்செய்தி மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் பாட்டி அவள் முதுமையிலும் பிட்டு விற்று பிழைத்துக் கொண்டிருப்பவள். 

தான் சமைத்த முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்து விட்டு, அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர் அவிக்கும் பிட்டை விற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். வெள்ளத்தை தடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி என ஒதுக்கப்பட்டது. வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. இந்த தள்ளாத வயதில் தன்னால் கரையை அடைக்க முடியாது என்பதால் கூலிக்கு ஆள் தேடினாள். இதை அறிந்து கொண்ட சுந்தரேஸ்வரப் பெருமான் மூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். 

வந்தியின் முன் வந்து நின்றவர், பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக நான் கேள்விப்பட்டேன். நானே உனக்கு பதிலாக வேலை செய்கிறேன், கூலியாக நீ அவிக்கும் பிட்டை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறினார். பாட்டியும் ஒப்புக்கொண்டார். தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண்வெட்டினார். அதன் பிறகு, ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் சோம்பல் முறித்தார். 

திடீரென வந்தியின் வீட்டுக்குச் சென்று, பாட்டி பிட்டு கொடு கூலியில் கழித்துக்கொள், என வாங்கி சாப்பிடுவார். அவரது இடத்தில் வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமை கண்காணிப்பாளர் அங்கு வந்தார். ஏய்! என்ன கூத்து இங்கே! வேலைக்கு வந்தாயா? ஆட வந்தாயா? கிழவியிடம் பிட்டை வாங்கித் தின்றுவிட்டு ஆட்டமா போடுகிறாய்? என்று கண்காணிப்பாளர் கண்டித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்து விட்டான். 

அந்நேரத்தில் கண்காணிப்பாளர் சற்று ஒதுங்கிச் சென்று விட, மன்னனைக் கண்ட சிவபெருமான் ஒரு மரத்தடிக்குச் சென்று உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல் தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கே வந்தான். கண்காணிப்பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கினான். ஓங்கி முதுகில் ஒரு அடிவிட்டான். ஆனால் மன்னன் ஆவென அலறினான். அவன் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. 

அடி வாங்கிய சிவபெருமான் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. தான் அடித்த அடி தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந்தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். மேலும், ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் கட்டுப்பட்டது கண்டு வியப்பு மேலிட்டவனாய் கூலியாளாய் வந்தவரை பார்த்த போது, அவர் மறைந்து விட்டார். 

அப்போது தான் கூலியாளாய் வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்தார். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று அவள் வீட்டு முன்பு வந்திறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம், “தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தர விட்டிருக்கிறார். தாங்கள் எங்களுடன் வாருங்கள் என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள்.

14ஆம் தேதி விறகு விற்ற லீலை நடக்கிறது. 15ஆம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் சட்டத்தேர் நடக்கிறது. 16ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது. அன்று இரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமியும் திருவாதவூர் மாணிக்கவாசகர் விடை பெறுதல் நிகழ்வும் நடைபெறும். ஆவணி மாதம் முதல் மதுரையில் சிவபெருமானின் ஆட்சி ஆரம்பம் ஆகிறது. என்ன பக்தர்களே சிவபெருமானின் திருவிளையாடலை பார்க்க இப்பவே டிக்கெட் புக் பண்ணுங்க.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow