சுனாமி நினைவு தினம்.. உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவ மக்களுடன் இணைந்து கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் உயிரிழந்த நபர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உலகிலன் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், பல லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று 20-வது சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சென்னை பட்டினம்பாக்கம் நொச்சிகுப்பம் கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மீனவ மக்களுடன் கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில், பங்கேற்ற தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் அன்பழகன், செய்தியாளர்களிடம் பேசியதாவது, எங்களது சோகம் இன்னும் தீரவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் கொல்லப்படுவதும், சிறைச்சாலை அனுபவைப்பதும் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மீனவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மீனவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு டெல்லியில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.
What's Your Reaction?