மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சென்னையில் வெடித்த போராட்டம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Dec 26, 2024 - 11:23
 0
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சென்னையில் வெடித்த போராட்டம்
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரும், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கி படித்து வந்துள்ளனர். கடந்த 23-ஆம் தேதி இரவு இருவரும் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுற்றுத்தியோடு அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அந்த மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூபுரத்தை சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வரும் ஞானசேகரன், தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஞானசேகரனை காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகர் ஞானசேகரனுக்கு   இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் சிகிச்சை பிரிவில் (Convict Ward) சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக வெளியான முதல் தகவல் அறிக்கையில்,  தாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும், அலைபேசியில் இருந்த தனது தந்தை செல்போன் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்த வந்த பாஜக-வினரை முன்கூட்டியே போலீசார் கைது செய்தனர். முன்னதாக, அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக் கழகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நுழைவாயிலில்  இரும்பு தடுப்புகள் போடப்பட்டு பல கட்ட சோதனைக்கு பின்பே மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பரங்கிமலையில் உள்ள சமுதாய கூட்டத்தில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow