ரூ.2666 கோடி முதலீட்டில் 5,365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.. சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து

ஜாபில் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Sep 11, 2024 - 07:58
 0
ரூ.2666 கோடி முதலீட்டில் 5,365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.. சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து
mk stalin dmk us visit

அமெரிக்காவின் சிகாகோவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், உலகளாவிய ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5,365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழக இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

இதில், ஜாபில் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனமும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.666 கோடி முதலீட்டில் 365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கமும் அமைய உள்ளன. 

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் போது, முதல்வர் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில், உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4350 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று சிகாகோவில், ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜாபில் நிறுவனமானது, ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குபவர்களில் முன்னணி நிறுவனமாகும்.

இந்நிறுவனம் சீனா, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது. இத்தகைய ஜாபில் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வரின் முன்னிலையில் நடந்த இப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் ஜாபில் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் மேட் கிரவுலி, முதுநிலை இயக்குநர்கள் நித்து சின்கா, பி.ஜெ. பேரன்காப் ஆகியோர் பங்கேற்றனர். 

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனமானது, தொழிற்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமெரிக்க நாட்டின் விஸ்கான்சின்னிலுள்ள மில்வாக்கியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். இத்தகைய ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.666 கோடி முதலீட்டில் 365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

ஆட்டோடெஸ்க் நிறுவனமானது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டடக்கலை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. ஆட்டோடெஸ்க் நிறுவனத்தில் உலகளவில் 14,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். 

இத்தகைய ஆட்டோடெஸ்க் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow