பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொங்கல் பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் 10 மணிக்கு மேல் வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்காமல் வாயில் கேட்டை பூட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, 11.40 மணியளவில் வந்த 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், தங்களை உள்ளே விடும்படி கூறி கோஷம் எழுப்பியுள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் தாமதமாக வந்த அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த கல்லூரி மாணவர்கள் தாங்கள் வாங்கி வந்த மாலைகளை கல்லூரி வாயிலில் போட்டு விட்டும், பின் சாலைகளில் தூக்கி எறிந்தும் அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், பூந்தமல்லி சாலையில் ஐடி கார்டுகளை சுழற்றிக்கொண்டு "பச்சையப்பாஸ்-க்கு ஜே" என கோஷமிட்டு சாலையின் நடுவே பேரணியாக நடந்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து, தகவலின் பேரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பச்சையப்பன் கல்லூரியில் குவிக்கப்பட்டு அங்கு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சென்ற மாணவர்களை பிடிக்க முற்பட்டனர். ஆனால், போலீஸாரை பார்த்ததும் அவர்கள் கலைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
குறிப்பாக, பச்சையப்பன் கல்லூரியிலிருந்து அமைந்தகரை வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கூட்டம் கூட்டமாக "பச்சையப்பாஸ்க்கு ஜே" என கோஷமிட்டபடி சென்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பு மாநகர பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 11 மணி அளவில் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்த '15 B' என்ற மாநகர பேருந்தின் மீது ஏறி "பச்சையப்பாஸ்க்கு ஜே" என கூறியபடி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். அந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கீழ்பாக்கம் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டு, பின் கல்லூரிக்கு வந்து அராஜகத்தில் ஈடுப்பட்டு பேரணியாக சென்ற மாணவர்கள் "பாரிஸ் ரூட்டை" சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வீடியோ காட்சிப்பதிவுகளில் உள்ள மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
What's Your Reaction?