எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி
சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களை அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று கூடியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இவர்கள் தொடர்பான காணொளி அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும், அதனை ரத்து செய்து, சபாநாயகரின் வீடியோவை காண்பித்து, முதலமைச்சர், அமைச்சரின் உரையை காண்பிப்பதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக உறுப்பினர்கள் நேரலையில் பதிவு செய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா?’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா மு.க.ஸ்டாலின்? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்?
"யார்_அந்த_SIR?" என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை! தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல! என்று தெரிவித்துள்ளார். நேற்று அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.
அப்போது, பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி தான். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள். இதுபோன்ற 100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னாலும் கேட்க முடியும். அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த நிலையில் அதிமுக அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?