சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்.... பொதுமக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்!

தமிழ்நாட்டில் இன்று (அக். 16) சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

Oct 16, 2024 - 20:34
 0
சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்.... பொதுமக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்!
சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்.... பொதுமக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், தாராபுரத்தனர், தான்தோன்றிமலை, காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தெருக்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், தாராபுரத்தனர் பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால், சுமார் 5 கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். 

அதேபோல், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புவனகிரி, முட்லூர், காட்டுமன்னார்கோயில், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சிதம்பரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் மழைநீர் அதிக அளவு தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும், திருவண்ணாமலை பகுதிகளில் கனமழை பெய்ததால், செங்கம் அடுத்த சாத்தனூர் அணை, குப்பனத்தம் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் 119 அடியிலிருந்து தற்போது 98.70 அடியாக தண்ணீர் நிரம்பியுள்ளது. மலைப்பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

கோவை மாவட்டத்தில் கனமழை குறைந்து சாரல் மழை நீடித்து வருவதால் இயல்புநிலை திரும்பியது. கனமழை குறைந்த நிலையில், வழக்கம் போல் பேருந்து, ரயில்கள் இயங்குகின்றன. மேலும் நீர்வழிப் பாதைகளில் உள்ள அடைப்புகள் போர்க்கால அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த கடல் நீர், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதையடுத்து குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றூம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (அக். 16) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. மேலும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர்,அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.17) மிக கன மழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யலாம் எனவும் எச்சரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow