திமுக நடத்தினால் போராட்டம் நாதக நடத்தினால் நாடகமா..? சீமான் விமர்சனம்
திமுக ஆட்சியையும் காவல்துறை அதிகாரி வருண் குமாரையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிச.31) காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். போராட்டத்திற்கு முறையாக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, இது ஒரு அவசியமற்ற கொடுமையான அடக்குமுறை. இதற்கு முன்பும் போராட்டம் நடத்தி இருக்கின்றோம், இப்போது மட்டும் கைது செய்தது ஏன்? விசாரணை நேர்மையாக நடக்கும்பட்சத்தில் போராடக்கூடியவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று சீமான் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, ஒரு தனி மனிதருக்கு எப்படி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் துணிவு வந்தது. ஒரு அரசியல் பின்புலமோ, அதிகார பலமோ இல்லாமல் எப்படி இந்த துணிவு வந்தது.
பல்லாயிரக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவாகும் நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மட்டும் எப்படி வெளியாகும். மத்திய அரசு, தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என விளக்கம் அளித்தால் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நடத்திய போராட்டங்கள் எல்லாம் நாடகமா? திமுக நடத்தினால் போராட்டம் நாங்கள் நடத்தினால் நாடகமா? என்று கூறினார்.
மேலும், காவல்துறை அதிகாரி வருண்குமார் திருடன் என சீமான் காட்டமாக விமர்சித்தார். வருண்குமாருக்கும் அவரது மனைவிக்கும் அருகாமை மாவட்டங்களிலேயே திமுக அரசு பதவி வழங்கி வருவதாகவும் தன் கட்சிக்காரர்களின் செல்போன்களை கைப்பற்றி வைத்து கொண்டு திருப்பி கொடுக்காமல் அதில் இருந்த ஆடியோக்களை எல்லாம் திமுக ஐடி விங்கிற்கு வருண் குமார் கொடுத்ததாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.
தொழில் அதிபர் மூலம் சீமான் மன்னிப்பு கேட்டார் என்ற கேள்விக்கு, காவல்துறை அதிகாரி வருண் குமார் தான் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மன்னிப்பு கேட்டார். நான் தூது அனுப்பிய தொழிலதிபர் யார் என்று வருண்குமார் தெரிவிக்க வேண்டும். திமுக நேரடியாக என்னிடம் மோத துணிவில்லாமல் வருண் குமாரை முன்வைத்து மோதி வருகிறது. திமுக கட்சியினரை போல் பேசும் காவல்துறை அதிகாரி வருண்குமார், திமுக மாவட்ட செயலாளர் பதவி வாங்கிக்கொண்டு பேசட்டும் என்று கூறினார்.
What's Your Reaction?