சென்னையில் மலர் கண்காட்சி.. ஜனவரி 2-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஜனவரி 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை மலர் கண்காட்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையின் நான்காவது மலர் கண்காட்சி வருகின்ற ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 11-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், செம்மொழி பூங்காவில் ஆய்வு செய்து பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சென்னையின் நான்காவது மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜனவரி 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.
50 வகையான மலர்களுடன் 30 லட்சம் மலர் தொட்டிகளுடன் இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானை, மயில், ரயில், ஆமை, படகு, வண்ணத்துப்பூச்சி, இதயம், அன்னப்பறவை, நடனமங்கை என 20 வகையான வடிவங்களில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக சென்னையில் கடந்த 2022-ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் இந்த மலர் கண்காட்சி நடைபெற்றது. அப்போது 44 ஆயிரத்து 888 பேர் பார்வையிட்டனர். இரண்டாவதாக மலர் கண்காட்சி கடந்தாண்டு (2023) ஜூன் மாதம் செம்மொழி பூங்காவில் நடைபெற்றது. அதில் 23 ஆயிரத்து 302 பேர் பார்வையிட்டனர்.
மூன்றாவது மலர் கண்காட்சி கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 27 பேர் பார்வையிட்டனர். செம்மொழிப் பூங்கா அமைந்துள்ள அதே பகுதியில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி புதிதாய் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை இதுவரை 1 லட்சத்து 86 ஆயிரத்து 580 பேர் பார்வையிட்டுள்ளனர்.
மலர் கண்காட்சியின் கட்டண விவரம் தொடர்பாக பிறகு அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார். ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. மலர் கண்காட்சியை அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவால் செம்மொழிப் பூங்கா கைவிடப்படுமா என்ற கேள்விக்கு செம்மொழிப் பூங்காவிற்கும், கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கும் இணைப்பு பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
What's Your Reaction?