திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dec 28, 2024 - 16:03
 0
திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி, கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர். இங்குள்ள கிரிவலப் பாதையில் ஏராளமான தங்கும் விடுதிகள்,வீடுகள் செயல்பட்டு வருகின்றது.  அதுமட்டுமின்றி அதிக அளவிலான பண்ணை வீடுகளிலும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கி அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் மேற்கொள்வர். 

இந்நிலையில், நேற்றிரவு கிரிவலப் பாதையில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நான்கு பேர் ஆன்லைன் மூலம் கடந்த 26 ஆம் தேதி முன்பதிவு செய்துவிட்டு நேற்று காலை பதிவை உறுதி செய்துவிட்டு, நேற்று மதியம் ஒரு மணி அளவில் வந்து தங்கியுள்ளனர்.  இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படாததால் அங்கு உள்ள ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவு தட்டப்பட்ட நிலையில் கதவு திறக்கப்படாததால் கைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். 

கைபேசி எண்ணும் எடுக்காத நிலையில் ஜன்னல் வழியாக பார்த்த போது நான்கு பேரும் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நான்கு பேர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இவர்கள் நான்கு பேரும் ஆன்மீகப் பற்று காரணமாக திருவண்ணாமலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முன்பாக ஒரு கடிதமும், ஒரு வீடியோவும் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் ருக்மணி பிரியா (45), மகாகால வியாசர் (55),  முகுந்த் ஆகாஷ் குமார் (17), ஜலந்தரி (20) ஆகியோர் தற்கொலை  செய்து இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் எனவும் அதிக ஆன்மீக பற்று காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக இரண்டு பக்க அளவில் கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில்  கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்மீக நகரமான திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தனியார் பண்ணை வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் ஆன்மிக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் ஏராளமான தங்கு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகள் உரிய அனுமதி பெறாமல் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களை தங்க வைப்பதால் இங்கு யார் தங்குகிறார்கள் என்ற விவரம் காவல்துறைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ தெரிவிக்கப்படுவதில்லை.

திருவண்ணாமலை நகரில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பண்ணை விடுதிகளை அரசு கண்காணித்து அனுமதி பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே  இங்கு தங்குபவர்கள் குறித்த விபரம் மற்றும் இவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow