ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை - புதிய காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன் என்று சென்னை காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Jul 8, 2024 - 22:59
Jul 9, 2024 - 01:42
 0
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை - புதிய காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை
Chennai New Commissioner Arun IPS

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை அடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்படுள்ளார். 110வது சென்னை காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் இன்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி அருண், சென்னை மாநகரத்திற்கு நான் புதிதல்ல, சென்னை காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளேன். குறிப்பாக ரவுடிசத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது,குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்,போக்குவரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பேன்.

அதேபோல காவல்துறையில் உள்ள ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கும் முன்னுரிமை கொடுப்பேன். காவல்துறையில் பல பொறுப்பு உள்ளது, சென்னையில் பல பொறுப்புகளின் பணியாற்றி உள்ளேன், இது ஒரு கூடுதல் பொறுப்பாக அமைந்துள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என புள்ளிவிவரங்கள் மூலமாக தான் தெரியவரும், குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் அதை தடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டே தான் இருக்கிறோம், புள்ளிவிவரங்களில்  தமிழகம் மற்றும் சென்னை காவல்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்து தான் உள்ளது, இருப்பினும்  அதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டே தான் வருகிறோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு, அதை விசாரித்து சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தினமும் புது திட்டங்களை அறிவிப்பதால் ஒன்னும் நடக்க போவதில்லை எனவும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து பணியாற்றினாலே குற்றங்கள் குறையும் என அவர் தெரிவித்தார்.

ரவுடியிசத்தை கட்டுப்படுத்த என்கவுண்டர் இருக்குமா என்ற கேள்விக்கு, என்கவுண்டர் கிடையாது, ரவுடிகளுக்கு என்ன மொழி புரியுமோ, அந்த வகையில் நடவடிக்கை இருக்கும் என அதிரடியாக பேசினார். மேலும் எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு நன்றி எனவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன் என அவர் உறுதி அளித்தார்.

யார் இந்த அருண்:

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள அருண் 1998 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார்.

ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார் அருண்

துணை ஆணையராக சென்னை அண்ணா நகர் மற்றும் செய்ன்ட் தாமாஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார் அருண் ஐபிஎஸ். மேலும் தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு காவல்துறை துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றியுள்ளார் அருண்.

மேலும் சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் - ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் தற்போது நியமனம் செய்யப்படுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow