யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - நீதிமன்றம் சரமாரி கேள்வி
கோவையில் யானை வழித்தடத்தில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வனப்பகுதியை ஒட்டிய யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க கோரி வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வனத்துறை சிறப்பு அமர்வில் நீதிபதி சதிஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசு தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அந்த அறிக்கையில் 2023 ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு நவம்பர் வரை சட்ட விரோதமாக மண் எடுத்தவர்களுக்கு 119 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது மண் அள்ளும் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மேலும் தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், கோவை மதுக்கரை, கரடி மடை உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி அறிக்கையை சுட்டிக்காட்டி இந்த மண்ணை கொண்டு செல்ல 20 ஆயிரம் முறை லாரிகள் இயக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் முறையாக புலன் விசாரணை நடத்தப்பட வில்லை என அதிருப்தி தெரிவித்தனர்
மேலும் செங்கல் சூளைகளை மூடும் போது அங்கிருந்த மண் மற்றும் செங்கற்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி அவை பறிமுதல் செய்யப்பட்டதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மண் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? தோட்டப்பட்ட குழிகளை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கண்காணிப்பு முறையாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
குறிப்பிட்ட இந்த பகுதிகளில் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஓராண்டுக்கு மேல் பணியில் நீடிக்கவில்லை என்பதில் இருந்து திட்டமிட்ட செயல் என குறிப்பிட்ட நீதிபதிகள், கனிமவளத்துறை அதிகாரிகளின் உடந்தை இல்லாமல் இவ்வளவு பரப்பில் மண் எடுத்திருக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இந்த பகுதிகளில் மண் அள்ளும் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் சட்டவிரோதமாக மண்ணை கொண்டு செல்ல போடப்பட்ட சாலைகள், மற்றும் பாலங்களையும் அழிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், ரவீந்திரன், மண் எடுத்தது யார், யார் யாருக்கு மண் கொடுக்கப்பட்டது? பயனாளிகள் யார் என்பன உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் மூலமாக தாக்கல் செய்வார் என்றும் அரசு இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்க்காது என்றும் எதிர்காலத்தில் சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க தொழில் நுட்ப உதவிகள் நாடப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
What's Your Reaction?