டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் மத்திய மாநில இரு அரசுகளும் மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக அரசு நாடகம் ஆடுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக, பல்வேறு கட்டங்களாக போராடி வரும் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி மக்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
மதுரை மேலூரில் அரிட்டாபட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு சென்ட் விவசாய நிலத்தை கூட எந்த அரசும் கையகப்படுத்த கூடாது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை தடுக்க எந்த எல்லைக்கும் நாங்கள் போவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய மாநில இரு அரசுகளும் மக்களை ஏமாற்றி உள்ளனர். டங்ஸ்டன் சுரங்க ஏலம் விடுவதற்கு முன்பு மத்திய அரசுக்கு எந்த எதிர்ப்பையும் மாநில அரசு தெரிவிக்கவில்லை.
நம் மண்ணை அழிக்க நினைப்பவர்கள் படுபாவிகள், அவர்களை நாம் சும்மா விடக் கூடாது. ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதாக ஒருபுறம் தெரிவிக்கும் திமுக, இப்போது இங்கு டங்ஸ்டன் அமைக்க ஆதரவு தெரிவித்து இரட்டை நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு நடத்திய டங்ஸ்டன் சுரங்க ஏல கூட்டங்களில் தமிழக அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். டங்ஸ்டன் விவகாரத்தில் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.
விவசாயிகள் என் கடவுள். அவர்கள் வாழும் மண்ணை காக்க வேண்டியது என்னுடைய கடமை. ஓட்டுக்காகவோ, அரசியலுக்காகவோ நான் வரவில்லை. உணர்வுப்பூர்வமாக வந்துள்ளேன். பாரம்பரிய பல்லுயிர் சூழலியல் தளம் அமைந்துள்ள இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும். எங்களிடம் ஆட்சி இருந்தால் தமிழ்நாட்டில் எந்த சுரங்கமும் அமைக்க முடியாது என சட்டம் கொண்டு வருவோம்.
திடீரென்று இரு நாட்களுக்கு முன்னர் டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்தி விட்டதாக வதந்தியை பரப்பினார்கள். திட்டம் நிறுத்தப்படவில்லை, மறு ஆய்வு தான் செய்யவுள்ளனர். பொய் சொல்வதில் phd படித்தவர்கள் இவர்கள் என்றார்
பின்னர் அவர் அளித்த பேட்டியில், "டங்ஸ்டன் சுரங்கம் தேவையில்லாத ஒன்று. இதில் பெரிய சூழ்ச்சி உள்ளது. டங்ஸ்டன் குறித்த தகவல்களை எல்லாம் மத்திய அரசுக்கு கொடுத்ததே தமிழக அரசு தான். இதே பகுதியில் கிரானைட் குவாரிக்காக Tamin நிறுவனத்திடம் இருந்த நிலம் ஏன் மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைக்க பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடையூறாக இருக்கும் என தமிழக அரசு செய்த திட்டம் அது.
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான மத்திய அரசு நடத்திய கூட்டங்களில் மாநில அரசின் அதிகாரிகள் பங்கேற்றனர். டங்ஸ்டன் சுரங்கம் வராது என இப்போது தீர்மானம் போடுகிறார்கள். இதையே தான் கச்சதீவு விவகாரத்திலும் செய்தார்கள்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போல, இந்த பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய மண்டலம் என சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
மண்ணை அழித்து விட்டு நாளைக்கு சாப்பாட்டுக்கு வழியில்லாமல் யாரிடம் பிச்சை எடுக்கப் போகிறோம். ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவருக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது.
இதில் கட்சி, கூட்டணி பற்றியெல்லாம் நான் பேசவில்லை. மத்திய அரசு செய்தது தவறு என கண்டிக்கிறேன். இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா?
வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இதுவரை குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. இது தான் சமூக நீதியா? இது தான் பட்டியலின மக்கள் மீதான உங்கள் அக்கறையா? என அம்புமணி ராமதாஸ் கூறினார்.
What's Your Reaction?