Mohan G Arrest : லட்டு பிரச்சனையே ஓயவில்லை.. அடுத்து பழனி பஞ்சாமிர்தமா?.. பிரபல இயக்குநர் கைது
Director Mohan G Arrest on Palani Panchamirtham : இந்திய அளவில் திருப்பதி லட்டு விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
Director Mohan G Arrest on Palani Panchamirtham : ஆந்திராவில் ஜெகன்மோகன் முதலமைச்சராக இருந்தபோது திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் நெய் மற்றும் பால் பொருட்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இதனிடையே விளக்கம் கேட்டு திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜியை(Mohan G Arrest) காவல் துறையினர் இன்று கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து சர்ச்சை கருத்துக்களை மோகன் ஜி(Mohan G) பதிவிட்டு வந்தார். மேலும், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த நேர்காணலில், பிரபலமான கோவிலில் பயன்படுத்தப்படும் பஞ்சமிர்தத்தில், ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்ததாக செவி வழியாக கேள்விப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், எந்த தகவலும் இல்லாமல் இயக்குனர் மோகன் ஜியை காவல்துறை கைது செய்துள்ளது என்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கைது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
What's Your Reaction?