ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து மோதல் ..!

பாமக இளைஞர் சங்கத் தலைவர் நியமனத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

Dec 28, 2024 - 19:09
 0
ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து மோதல் ..!
ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து மோதல் ..!

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி சங்க தலைவராக முகுந்தன் என்பவர் செயல்படுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக் குழுக் கூட்ட மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் மாறி மாறி கருத்து தங்களது தெரிவித்தது அக்கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில், பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், மூத்த மகளின் மகனான தன் பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்து, “அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும்” கூறினார்.  அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பேசிய அன்புமணி ராமதாஸ், “யார்... எனக்கா?” என்று கேள்வி எழுப்பினார். “ஆமாம்” என்று ராமதாஸ் கூறிய நிலையில், எனக்கெல்லாம் யாரும் வேண்டாம் என்று பதிலளித்தார். 

முகுந்தன் கட்சி பொறுப்புக்கு வந்து நான்கு மாதம் தான் ஆகிறது. அதற்குள் அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பா..? அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். நல்ல அனுபவசாலிக்கு அந்தப் பொறுப்பைக் கொடுங்கள் என்று கூறினார். 

திடீரென்று ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க முடியாவிட்டால், யாரும் இனி இந்தக் கட்சியில் இருக்க முடியாது,” என்றார். அப்போது அரங்கத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அதற்கு அன்புமணி, “அது சரி” என்றார். அப்போது ராமதாஸ், “என்ன சரி, சரி என்றால் போ அப்போ,” என்று கூறியது கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பின்னர் ராமதாஸ், “முகுந்தன் பரசுராமனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார்,” என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி, “குடும்பத்தில் இருந்து இன்னொருவரை தூக்கிப் போடுங்கள்,” என்று கூறி, கையில் இருந்த மைக்கை மேஜை மீது எறிந்தார். பின்னர் பேசிய அவர், “சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி தொலைப்பேசி எண்ணை அறிவித்து, “இந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள், என்னைத் தொடர்பு கொண்டு அனைவரும் வந்து எப்போது வேண்டும் என்றாலும், என்னை வந்து பார்க்கலாம்” என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

கூட்டத்தில் இருந்த தொண்டர்களிடையே உங்களுடைய புதிய இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன் என்று மீண்டும் அறிவித்தார். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். இதை யாராலும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லையென்றால், அதற்கு வேறு ஒன்றும் நான் சொல்ல முடியாது” என்றார். பின்னர் மீண்டும் அழுத்தமாக, “நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள் என்று கூறியது பாமக கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாமக பொதுக்குழு முடிந்து ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வெளியே வந்தனர். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் காரை வழி மறித்த தொண்டர்கள் “அன்புமணி வாழ்க.. வாழ்க..” என்று தொடர்ந்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow