பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.. எல்.முருகன்
பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராட்டங்களை நடத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய வானொலியில் மனதில் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையின் 117-வது மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்வினை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சென்னை கோயம்பேட்டில் உள்ள பூங்காவில் பொதுமக்களுடன் இணைந்து கேட்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி, தேச மக்களுடன் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றியுள்ளார். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது பற்றி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
சினிமா, திரைத்துறை, விளையாட்டு உள்ளிட்டவை இந்திய பொருளாதாரத்தில் எந்த அளவு பங்கு வகிக்கிறது என்பதையும் வேர்ல்ட் ஆடியோ சமிட் 2025-ஆம் ஆண்டிற்கான தயாரிப்புகள் குறித்தும் உரையாற்றினார். மேலும், மலேரியா ஒழிப்புக்கான முன்னேற்பாடு, ஆர்கானிக் தோட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் செய்கின்ற சேவைகளை இன்று இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் பிரதமர் மனதின் குரல் மூலமாக எடுத்துரைத்துள்ளார்.
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க கூடியது என்றும் பாஜக இதற்காக பல்வேறு போராட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும்.
திமுக அரசாங்கம் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு விட்டுவிடக்கூடாது. முறையாக விசாரித்து சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். ஞானசேகரன் இன்று மட்டுமல்ல இதற்கு முன்பும் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அந்த குற்றவாளிக்கும், திமுகவிற்கும் என்ன உறவு? அவர் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பதை மக்கள் பார்வைக்கு திமுக கொண்டு வர வேண்டும். எங்கள் கட்சியில் இருந்தார்கள் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
அதை விட்டுவிட்டு எங்கள் கட்சி இல்லை, எங்கள் நிர்வாகி இல்லை என்பது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது. தமிழக அரசால் செய்யப்பட முடியவில்லை என்றால் இதை சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளியாவது தமிழக அரசு எந்த அளவிற்கு கவனக்குறைவாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
சட்டம், ஒழுங்கிற்கு அர்த்தமே தெரியாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு அரசாங்கம் இருக்கிறது. தமிழகம் முழுவதும் எந்த கிராமங்களுக்கு சென்றாலும் டாஸ்மார்க், கஞ்சா போதைபொருள் தான் இருக்கிறது. திமுகவினர் தான் போதைப்பொருள் விற்பனை செய்வது , கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். திருமாவளவன், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதல் தகவல் அறிக்கை எந்த விதத்தில் வந்தாலும் அது தவறுதான். பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளியாவது அவமானமான செயல்.
What's Your Reaction?