அண்ணா பல்கலைக்கழகம் வன்கொடுமை சம்பவம்... தேசிய மகளிர் ஆணையம் விசாரணை..!
மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து இன்று தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினர் மம்தாகுமாரி விசாரணைக்கு செல்வதாகவும், விசாரணைக்கு பிறகு விவரங்களை தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவியை 23ஆம் தேதி இரவு ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்துகிறது.
ஏற்கனவே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையம், சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் எப்படி நுழைந்தார். சரித்திர பதிவேடு குற்றவாளியை இதற்கு முன் காவல்துறை கைது செய்வதில் அலட்சியம் காட்டியது இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என்று தேசிய மகளிர் ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நேரடியாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மகளிர் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். இதில் டெல்லியில் இருந்து வந்துள்ள தேசிய மகளிர் ஆணை உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவீன் சிவானி டே ஆகியோர் இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.
நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் இவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் நேரடியாக மாணவ மாணவியரிடம் பாதுகாப்பு தொடர்பாக விசாரணை செய்ய உள்ள இவர்கள் பாதிக்கப்பட்ட மாணவி இடமும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?