திருப்பதி லட்டு.. சர்ச்சை பேச்சு..கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி

Actor Karthi Apologize on Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு குறித்து மெய்யழகன் பட புரமோசன் விழாவில் கார்த்தி பேசியது சர்ச்சையான நிலையில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

Sep 24, 2024 - 15:12
Sep 24, 2024 - 16:58
 0
திருப்பதி லட்டு.. சர்ச்சை பேச்சு..கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி
tirupati laddu issue karthi apology

Actor Karthi Apologize on Tirupati Laddu Issue : திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது பெரும் பிரச்சினையான நிலையில் நடிகர் கார்த்தி லட்டு குறித்து பேசியது சர்ச்சையானது. ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் கார்த்தி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் பிரசாதமான லட்டில்  விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது பலரையும் மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. இந்துக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர அராசங்கம் நியமித்துள்ளது.

இந்த விவகாரத்தில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்.அதேபோல் திருப்பதி லட்டு விவகாரத்தில் கோயில் புனிதம் கெட்டுவிட்டதால், அதற்கு பரிகாரமாக 3 நாட்கள் சிறப்பு யாகங்களையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்தது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இது போன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் 'சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்' என்ற அமைப்பை நிறுவ கோரிக்கை விடுத்தார். இந்த விஷயத்தில் எதற்காகத் தேசிய அளவில் அச்சத்தைப் பரப்புகிறீர்கள் என பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், "இந்த சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்திருக்கிறது. எனவே, விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுங்கள். ஆனால், எதற்காக அச்சத்தைப் பரப்பி தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்? ஏற்கெனவே, நாட்டில் போதுமான அளவு வன்முறைச் சூழல் நிலவுகிறது (மத்தியில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு நன்றி) என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பவன் கல்யாண், “உங்கள் (பிரகாஷ் ராஜ்) மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், மதச்சார்பின்மை என்று வரும்போது, ​​அது இரு வழியே தவிர, ஒரு வழி அல்ல” என்று கூறினார். இந்துக்கள் மட்டுமல்ல, பிற சமூகங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவர்களுக்காக நான் நிற்கிறேன் என்று பவன் வலியுறுத்தினார். “நான் மதராசாக்களுக்கு கூட நன்கொடை கொடுத்தேன். நான் கிறித்துவ மிஷனரி பள்ளியில் படித்தேன். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் என் மதத்தை யாராவது புண்படுத்தினால் நான் அமைதியாக இருப்பேன் என்று அர்த்தம் இல்லை,” என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், நடிகர் கார்த்தியும் திருப்பதி லட்டு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.இப்படம் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம், தொகுப்பாளர் லட்டு கொடுத்த போது, அதற்கு கார்த்தி இப்போ லட்டு குறித்து பேச வேண்டாம், அது சென்சிடிவ்வான விஷயம், அது குறித்து இப்போ பேச வேண்டாம் என்றார். இதைக்கேட்டு அரங்கில் இருந்த பலர்,கைத்தட்டி சிரித்தனர்.

இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி லட்டு குறித்து பேசியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன். லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என கூறியுள்ளனர். அவ்வாறு சொல்லக் கூடாது. நான் உங்களை நடிகர்களாக மதிக்கிறேன். ஆனால் சனாதன தர்மத்தை பற்றி பேசும் போது, ஒன்றுக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே, லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை கடைபிடித்து வருகிறேன்" என கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow