மனித நேயமற்றவர்.. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.. அல்லு அர்ஜுன் வேதனை
’புஷ்பா-2’ திரைப்பட வெளியீட்டின் போது தான் வந்தது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 - தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்தார். நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் காண்பதற்காக அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் இளம் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இவரது எட்டு வயது மகன் தலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை சட்டசபையில் கடுமையாக தாக்கி பேசினார். அதாவது, அல்லு அர்ஜுன் செய்தது மனித தன்மையற்ற செயல். காவல்துறையினர் அனுமதி மறுத்தும் ‘புஷ்பா -2’ திரைப்படத்தை பார்ப்பதற்கு அல்லு அர்ஜுன் வந்துள்ளார். அதுவும் கார் சன் ரூஃபை திறந்து ரோட் ஷோ நடத்தினார். இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் விளக்கமளித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, எனக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. கூட்ட நெரிசலில் ரோட் ஷோ காட்டியதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். காரில் இருந்து வெளியே வந்து முகத்தை காட்டினால் தான் ரசிகர்கள் அமைதியாகுவார்கள் என்று தான் காரின் சன் ரூஃப் கதவைத் திறந்து ரசிகர்களுக்குக் கை அசைத்தேன்.
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்தது குறித்து, அந்த சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து தான் எனக்கு தகவல் கிடைத்தது. அந்த சோகம் தெரிந்திருந்தால் எப்படி திரையரங்கில் படத்தை பார்க்க முடியும். நடந்தது எதிர்பாராமல் நடந்த விபத்து. என் மீது தொடரப்பட்ட வழக்கை நான் சட்டப்படி சந்தித்து கொள்வேன். என்னை மனித நேயமற்றவன் என்று சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள் அது மிகுந்த வருத்தமளிக்கிறது. நான் எப்படிப்பட்டவன், எவ்வளவு மனிதம் நேயம் கொண்டவன் என்று என் ரசிர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறினார்.
What's Your Reaction?