இஸ்ரோ நிகழ்த்திய சாதனை.. விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-60
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சந்திராயன் 3, ஆதித்யா எல் 1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உலகையை திரும்பி பார்க்க வைத்தது. தற்போது, அடுத்த சாதனையை நிகழ்த்தும் விதமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டை இன்று (டிசம்பர் 30) விண்ணில் ஏவியது.
அதாவது, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ‘ஸ்பேட்எக்ஸ்’ ('SpaDeX') என்ற திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என்ற இரண்டு விண்கலன்களை தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த இரண்டு விண்கலன்களும் தலா 220 கிலோ எடை கொண்டவை. இவை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று (டிசம்பர் 30) 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், செயற்கைகோள்கள் குறுக்கீடு காரணமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று (டிசம்பர் 29) இரவு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த விண்கலன்கள் பூமியிலிருந்து 476 கி.மீ தொலைவு கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்படவுள்ளன. சில மாதங்களுக்கு பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதுதவிர ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது. அதில், இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 24 ஆய்வுக் கருவிகள் இருக்கின்றன. இவை ரோபோடிக் , செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை விண்வெளியில் முன்னெடுக்க உள்ளதாகவும் இஸ்ரோ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நாசாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?