பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் , ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளயைம் - உதகை, சிறப்பு மலை ரயில் சேவை ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகை தந்து இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலையின் அழகை கண்டு ரசித்தும், வியந்தும் வருகின்றனர். மேட்டுப்பாளையம் - குன்னூர் - உதகை இடையே தலா ஒரு முறை, உதகை - குன்னூர் இடையே தலா நான்கு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது.
மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவதாலும், தற்போது புத்தாண்டு, பொங்கல் என தொடர் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், மேட்டுப்பாளையம் - உதகை மற்றும் உதகை - குன்னூரிடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேடுப்பாளையம், ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் முதல் உதகைக்கு 16 மற்றும் 18-ம் தேதிகளிலும், உதகையிலிருந்து 17 மற்றும் 19-ம் தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் நான்கு நாட்கள் இயக்கப்படும். ஊட்டி - கேத்தி - ஊட்டி இடையே வரும் ஜன.14ஆம் தேதி முதல் ஜன.19ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளும், குன்னூர் முதல் உதகை வரை 5 பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். இதில், மேட்டுப்பாளைம் முதல் குன்னூர் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும்.
குன்னூர் முதல் உதகை வரையில் மொத்தம் 220 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.25 மணிக்கு உதகையிலிருந்து காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். அதே போல குன்னூர்-உதகை இடையே ஜனவரி மாதம் 16, 17,18,19 ஆகிய நான்கு நாட்களில் இயக்கப்படும். இதில் முதல் வகுப்பு 80 மற்றும் இரண்டாம் வகுப்பு 130 இருக்கைகளுடன் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இதைத் தவிர மலை ரயிலில் குறைந்த தூரம் பயணிப்பவர்களுக்கு உதகையிலிருந்து கேத்தி வரை இந்த நான்கு நாட்கள் ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இதில் 80 முதல் வகுப்பு மற்றும் 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். காலை 9.45, 11.30 மற்றும் 3 மணிக்கு உதகையிலிருந்து ரயில் புறப்பட்டு கேத்தி சென்றடையும். இந்த ரயில்களில் பயணிக்க நாளை காலை 8 மணி முதல் முன் பதிவு தொடங்குகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?