ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த 2 பேர் கைது

ரீல்ஸ் மோகத்தால் ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்த வட மாநில இளைஞர்கள் சத்தீஸ்கருக்கு தப்ப முயன்ற நிலையில் சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.

Oct 2, 2024 - 21:27
Oct 2, 2024 - 21:34
 0
ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த 2 பேர் கைது
ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த 2 பேர் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி கடந்த 25ஆம் தேதி இரவு புறப்பட்ட பொதிகை அதிவிரைவு ரயிலானது கடையநல்லூர் - பாம்பு கோயில்சந்தை ரயில் நிலையங்கள் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் இரண்டு பெரிய அளவிலான பாறை கற்கள் இருந்த நிலையில், அந்தக் கற்களின் மீது ரயிலானது மோதியது.

இதனால், ரயிலின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்ட போதும், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில், ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாம்புகோவில் ரயில் நிலையத்திற்கு வந்த இரண்டு வடமாநில இளைஞர்கள் சென்னைக்கு ரயில் எப்பொழுது வரும் என ரயில்வே பணியாளர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு காவல் துறையினரை பார்த்ததும், அந்த இளைஞர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர்.

உடனே, சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த இரண்டு இளைஞர்களையும் துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர்கள் தான் ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த இளைஞர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புல்சிங் பகேல் (21) மற்றும் ஈஸ்வர் மேதியா (23) என்பது தெரிய வந்தது. மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மோகத்தில் ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து அதன் மீது ரயில் ஏறுவது போன்ற காட்சிகளை எடுப்பதற்காக கற்களை வைத்ததாகவும் ஆனால் ரயில் அந்த நேரத்தில் வராததால் அப்படியே விட்டு சென்றதாகவும், காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவல் துறையினர் அந்த இளைஞர்கள் வேலை பார்த்துவரும் கல்குவாரிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, தங்களை காவல்துறையினர் தேடி வருவதை தெரிந்துகொண்ட அந்த இளைஞர்கள், சத்தீஸ்கருக்கு தப்பிக்க முயற்சி செய்து ரயில் நிலையத்தில் சிக்கிக் கொண்டதையும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் தற்போது கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தில் இரண்டு இளைஞர்கள் விபரீதம் தெரியாமல் தண்டவாளத்தில் பெரிய கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்தி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow