ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த ஸ்டாலின்.. ரிஷி பஞ்சமி நாளில் தேர்தல் பணியை தொடங்கிய திமுக

ரிஷி பஞ்சமி நாளில் தேர்தல் பணியை தொடங்குவது ஜெயலலிதாவின் அரசியல் பாணி. அதே போல முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தாலும் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி சட்டசபை தேர்தல் வேலைகளை தொடங்கி வைத்துள்ளார்.

Sep 9, 2024 - 08:11
 0
ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த ஸ்டாலின்.. ரிஷி பஞ்சமி நாளில் தேர்தல் பணியை தொடங்கிய திமுக
mk stalin dmk

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியுள்ளது திமுக. நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து குரு பூர்ணிமா நாளில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் ஜெயலலிதா பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அமெரிக்காவில் இருந்தாலும் ரிஷி பஞ்சமி நாளில் சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கி பணிகளை தொடங்கி வைத்துள்ளார். 

லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக முழு வேகத்தோடு சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக கடந்த ஜூலை மாதமே சட்டசபை தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த குழுவில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அந்த குழுவினரும் முதன் முறையாக தனியாக கடந்த ஜூலை 21ஆம் தேதி குரு பூர்ணிமா நாளில் ஆலோசித்தனர்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கட்சியிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய மாற்றத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்துவார் என்று பரவலாக பேசப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தாலும் அங்கிருந்து கட்சிப்பணிகளையும் ஆட்சி பணிகளையும் கவனித்து வருகிறார். இந்த சூழ்நிலையில்தான் திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலுக்கான வெற்றி வியூகம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது. 

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக அதே கூட்டணியோடு களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கலாம். அதிமுக தனி கூட்டணி அமைக்கும். அந்த கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என்று கடந்த மக்களவை தேர்தலின் போதே பிரேமலதா கூறிவிட்டார்.  பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அரசியல் படிக்க லண்டன் சென்றுள்ள அண்ணாமலை அங்கிருந்து கட்சிப்பணிகளை கவனித்து வருகிறார். 

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வழக்கம் போலவே சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்து விட்டார். விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் அங்கீகாரம் அளித்து விட்டது. அதே வேகத்தோடு மகிழ்ச்சிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபிக்க உள்ளார் விஜய். இப்போது வரைக்கும் சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. விஜய் கட்சியுடன் யாரெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்பது அடுத்த சில மாதங்களில் தெரியவரும். 

இந்த சூழ்நிலையில்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு அடுத்து வரும் நாள் ரிஷி பஞ்சமி நாளாகும். இந்த நாளில் தொடங்கும் நற்காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. இதே போல ரிஷி பஞ்சமி நாளில்தான் பொதுவாக ஜெயலலிதா தேர்தல் பணிகள் குறித்த முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார். அதே பாணியை இப்போது முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். 

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் காலத்திலேயே திமுகவின் தேர்தல் பணிகள் ஒவ்வொன்றும் நல்ல நாள் பார்த்துதான் தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தல் பணிகளின் போதும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே திமுகவினர் பணிகளை தொடக்கினர். இந்த நிலையில்தான் சட்டசபை தேர்தல் பணிகளையும் நல்ல நாளில் தொடங்கி வைத்துள்ளார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். 

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை சட்டசபை தேர்தல், மக்களை தேர்தல் காலங்களில் முதலில் நல்ல நாள் பார்த்து பணிகளை தொடக்கி வைத்து விடுவார். அவரது மறைவிற்குப் பிறகு கட்சி சில்லு சில்லாக சிதறியுள்ளது. தற்போது உள்ள பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீதும் அதிருப்திகள் நிலவுவதாக பேசப்படும் நிலையில் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை விரைவில் தொடங்கினால் மட்டுமே வெற்றி குறித்து யோசிக்க முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow