அனைத்திலும் முதல்வன் தமிழ்நாட்டின் முகத்தை மாற்றிய அரசியல் தலைவர் கருணாநிதி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று... கல்லக்குடி கொண்ட கருணாநிதி... தமிழ்மக்களின் நெஞ்சில் குடிகொண்ட வாழ்க்கைப் பயணத்தை கொஞ்சம் ரீவைண்ட் செய்துபார்ப்போம்...

Aug 7, 2024 - 11:50
Aug 7, 2024 - 11:56
 0
அனைத்திலும் முதல்வன் தமிழ்நாட்டின் முகத்தை மாற்றிய அரசியல் தலைவர் கருணாநிதி
Karunanidhi death anniaversay

பேரறிஞர் அண்ணாவுக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து கருணாநிதி செய்த அரசியல், தமிழக அரசியல் வரலாற்றின் மைல்கல்... 
முதலமைச்சராகப் பொறுப்பேற்று அவர் கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்கள், தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் ஒரு விடியல் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 


அவர் முதல் அமைச்சர். ஆனால் கடைசி மனிதன். அவர் மிகச்சிறந்த தலைவர்... அதைவிட மிக அருமையான தொண்டர். அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடியவர். ஆனாலும் அவர் காட்டிய வழியிலே நடப்பதிலே தவறாதவர். பெரியாருடைய உணர்வை பிரதிபலிப்பவர். அண்ணாவினுடைய அறிவாற்றலை மேலும் வளர்ப்பவர். அவருடைய எழுத்துக்கள் இலக்கணம் கற்றோரையும் வியக்க வைக்கும்... அவருடைய வசனங்கள், முதுகு வளைந்தோரையும் நெஞ்சம் நிமிர்த்த வைக்கும். அவர் இல்லாமல் தமிழ்நாட்டு வரலாற்றிலே ஒரு காட்சி இல்லை. அவர் இல்லாமல் தமிழ்நாட்டிலே எந்த மாற்றமும் இல்லை. தமிழக அரசியலோடு பின்னிப் பிணைந்தவர். தனக்கு முன்னும் தனக்குப் பின்னும் இப்படி ஒரு தலைவன் இல்லை என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். கவிஞராக, பாடலாசிரியராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக, கட்டுரையாளராக, அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் முகத்தை மாற்றிய முதலமைச்சராக, இருந்த அவர் வேறு யாருமல்ல... அவர்தான் கலைஞர் கருணாநிதி! 

அப்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் விளைவித்தெடுத்த முத்துதான் கருணாநிதி. சிறுவயதுக்கான துடுக்குத்தனங்கள் இருந்தாலும் , பின்னாளில் ஒரு சரித்திரமாக மாறுவதற்கான முன்னெடுப்புகளாக அப்போதே பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எழுத்தாகட்டும், பேச்சாகட்டும், அரசியலாகட்டும் எல்லாவற்றிலும் முதல்வனாய் இருப்பதற்காக அந்த சிறுவயதிலேயே அனுபவப் பாடங்களைத் தேடித் தேடி கற்றுக் கொண்டார்.


 ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்’ - இது தன்னுடைய 14வது வயதில் கருணாநிதி இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்காக எழுதிய பாடலின் பல்லவி. பள்ளிப்பருவத்திலேயே எழுத்து, இலக்கியம் என்று தன்னை நிலை நிறுத்தத் தொடங்கியதன் எதிரொலியாக அவர் படைத்த ‘மாணவநேசன்’ என்ற கையெழுத்து ஏடுதான், பின்னாளில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி உருவாகவும் அடித்தளம் அமைத்து கொடுத்தது. 

அதே போல நாடகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. திருக்குவளையில் நடந்த பள்ளி ஆண்டுவிழாவில் துருவன் என்னும் வேடத்தில் முதல் நாடக மேடை ஏறியவரின் முதல் நாடகம் பழனியப்பன். இதில் கருணாநிதியே நடித்தும் இருக்கிறார். 17 நாடகங்கள் எழுதிய கருணாநிதிக்கு கலைஞர் என்னும் பட்டத்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா வழங்கக் காரணமாக அமைந்தது தூக்குமேடை என்னும் நாடகம்தான். 


சினிமாத்துறையும் விட்டுவைக்கவில்லை கலைஞர் கருணாநிதி. தன்னுடைய 20 வயதில் ஜுபிடர்ஸ் நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றத் தொடங்கியவர், 1947ல் ராஜகுமாரி திரைப்படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையில் தடம் பதித்தார். இதே போல் 1950ல் வெளியான மந்திரி குமாரி திரைப்படத்தில், ஊருக்கு உழைப்பவன்டி.. எருமைக் கண்ணுக்குட்டி.. என்னும் பாடலை எழுதியிருக்கிறார். இப்படி தொடர்ந்து கதை, வசனம், திரைக்கதை, பாடல்கள் என்று அத்தனை திறமைகளையும் சினிமாவில் வெளிக்காட்டி இருக்கிறார்.

1947ல் ராஜகுமாரியில் தொடங்கிய திரைப்படத்துறைக்கான எழுத்துப்பணி 2011ல் பொன்னர் சங்கருக்கு கதை, திரைக்கதை, வசனம் என்று நிறைவானது. கிட்டத்தட்ட 76 திரைப்படங்களில் கருணாநிதியின் கைவண்ணம் மிளிர்ந்துள்ளது. இதில் ஆடஜெனமா, வீரகங்கணம், ஸ்திரீ ஜென்மா ஆகிய நேரடி தெலுங்கு படங்களும் அடக்கம். சிறுகதைகள், சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், வரலாற்றுப் புனைவுகள் என்று கருணாநிதியின் எழுத்துக்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளியாகி தமிழை வளர்த்ததோடு, கருணாநிதிக்கும் மென்மேலும் புகழ் சேர்த்தன. கருணாநிதியின் எழுத்தும், பேச்சுமே அவரை பெரியாரோடும், அண்ணாவோடும் நெருங்கச் செய்ததோடு, அவரது அரசியல் வாழ்க்கைக்கும் நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. 

டால்மியா புரம் பெயரை மாற்றக்கோரிய கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், மத்திய அரசுக்கு எதிரான சிறை நிரப்பும் போராட்டம் என போராட்டங்களில் பங்கெடுப்பதிலும் என்றும் கருணாநிதி தளர்ச்சி கண்டதில்லை. பேரறிஞர் அண்ணாவுக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து அவர் செய்த அரசியல், தமிழக அரசியல் வரலாற்றின் மைல்கல்... 

முதலமைச்சராகப் பொறுப்பேற்று அவர் கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்கள், தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் ஒரு விடியல் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

“மெட்ராஸ் ஸ்டேட்” என்பதை “தமிழ்நாடு” என்ற பெயர் மாற்றியது, சுயமரியாதை திருணச் சட்டம், பேருந்துகள் நாட்டுடமை, குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம், இட ஒதுக்கீடு அதிகரிப்பு, வேளாண்மைக்கு இலவச மின்சாரம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம், 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைத்தது, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தது., அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம், தென்குமரியில் 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை, சென்னையில் "டைடல் பூங்கா", சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயேமிகப்பெரிய பேருந்து நிலையம், 

பள்ளிச் சிறார்களுக்கு சத்துணவோடு முட்டை , மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, சமத்துவ புரங்கள், சென்னை கோட்டூர்புரத்தில் உலகத்தரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலக வளாகம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்", முதன்முதலாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியது... இதெல்லாம் அவர் கொண்டுவந்த திட்டங்களில் ஒருசிலதான்! 

தோன்றின் புகழோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்னும் அய்யன் வள்ளுவரின் குறள்வரிகளுக்கு ஏற்ப, தன் வாழ்க்கையைப் புகழ் வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவர்தான் கருணாநிதி. 

‘தென்றலைத் தீண்டியதில்லை, தீயைத் தாண்டியிருக்கிறேன். எனது வாழ்க்கையில் பாடும் குயில்கள் இல்லை. படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. இது பராசக்தி படத்தில் வரும் வெறும் வசனங்கள் மட்டுமல்ல... கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாளில் சந்தித்த அனுபவங்கள். 

அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு இன்னமும் பேரிழப்பாகவே உள்ளது! 

-  எம்.செய்யது முகம்மது ஆசாத்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow