Prabhas: ரியல் பாகுபலியாக மாறிய பிரபாஸ்… அடேங்கப்பா! வயநாடு மக்களுக்கு கோடிகளில் நிவாரணம்!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக, தெலுங்கு நடிகர் பிரபாஸ் கோடிகளில் நிதியுதவி செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சென்னை: பாகுபலி திரைப்படம் வெளியானது முதல், பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார் பிரபாஸ். அதுவரை டோலிவுட் ரசிகர்களின் டார்லிங் ஹீரோவாக இருந்த பிரபாஸ், பாகுபலிக்குப் பின்னர் இந்தியளவில் பிரபலமானார். பாகுபலி படத்தில் பிரபாஸ் - ராஜமெளலி கூட்டணி செய்த மேஜிக்கில் பான் இந்தியா சமஸ்தானமே ஆடிப்போய்விட்டது எனலாம். இதனால் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனாலும் சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றிப் பெறவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து சலார், கல்கி படங்களில் கம்பேக் கொடுத்தார் பிரபாஸ். பிரபாஸ் நடிப்பில் கல்கி 2ம் பாகம், ஸ்பிரிட் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இந்நிலையில், சினிமாவில் மட்டுமில்லாமல் ரியலாக தான் ஒரு மாஸ் ஹீரோ தான் என நிரூபித்துள்ளார் பிரபாஸ்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டன. இதில் 3 கிராமங்கள் அடியொடு மண்ணுக்குள் புதைந்தன. அதேபோல் இரவு நேரத்தில் வீடுகளில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் நிலச்சரிவில் சிக்கினர். இவர்களில் இதுவரை 400க்கும் அதிகமானவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயங்களோடு மீட்கப்பட்டாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
வயநாடு பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தாராள நிதி வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு லட்சங்களையும் கோடிகளையும் வாரி வழங்கி வருகின்றனர். கோலிவுட்டில் இருந்து சூர்யா, ஜோதிகா, கார்த்தி மூவரும் இணைந்து 50 லட்சம் ரூபாய் வழங்கினர்.
அதேபோல், சீயான் விக்ரம் 20 லட்சம், விக்னேஷ் சிவன், நயன் ஜோடி 25 லட்சம், ராஷ்மிகா மந்தனா 10 லட்சம், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தனர். டோலிவுட்டில் இருந்து சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து 1 கோடியும், அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாயும் வழங்கினர். இவர்களைத் தொடர்ந்து டோலிவுட் ஹீரோ, பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸும் நிவாரணம் வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க - தங்கலான் மேடையில் நெகிழ்ந்த சீயான் விக்ரம்
அதன்படி, வயநாடு நிலச்சரிவில் சிக்கிய மக்களுக்காக, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளாராம் பிரபாஸ். இதனையடுத்து பிரபாஸுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். மலையாள நடிகர் மோகன்லால், தனது அறக்கட்டளை மூலம் 3 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். அதனையடுத்து திரை பிரபலங்கள் வழங்கியதில் மிகப் பெரிய நிவாரணம் என்றால், அது பிரபாஸ் கொடுத்துள்ள 2 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






