சினிமா

தொழிலதிபரிடம் பணம் மோசடி: பிரபல டிவி நடிகைக்கு போலீசார் வலைவீசி!

கரூர் தொழிலதிபரிடம் பணத்தை ஏமாற்றிய டிவி நடிகை தலைமறைவாகி உள்ளார். இவரை பிடிக்க அம்மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தொழிலதிபரிடம் பணம் மோசடி: பிரபல டிவி நடிகைக்கு போலீசார் வலைவீசி!
Serial Actress
பிரபல சின்னத்திரை நடிகை ராணி, கரூர் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து கார், ரூ.10 லட்சம் பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படும் புகாரில், நடிகை ராணி மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நடிகை ராணியின் பின்னணி

ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்த நடிகை ராணி, சிறு வயதிலேயே 50க்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். படிப்பை முடித்துத் திருமணம் செய்துகொண்ட அவர், பல வருடங்களுக்குப் பிறகுத் தெலுங்கு சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தமிழில் சிகரம், அலைகள், சொந்தம், அத்திப் பூக்கள், வள்ளி போன்ற பிரபலத் தொடர்களில் வில்லி வேடங்களில் நடித்து அவர் பிரபலமானவர் ஆவார்.

கரூர் தொழிலதிபர் புகார்

நடிகை ராணி கரூர் ஹோட்டல் அதிபர் ஒருவரிடம் இருந்து ஒரு கார், ரூ.10 லட்சம் பணம் மற்றும் சில நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது. பல மாதங்கள் கடந்து பணத்தையும் நகைகளையும் திருப்பித் தருமாறு அந்தத் தொழிலதிபர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், நடிகை ராணி அவற்றை உடனடியாகத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தத் தொழிலதிபர் கரூர் காவல் நிலையத்தில் நடிகை ராணி மீது புகார் அளித்துள்ளார்.

தலைமறைவானதால் வழக்குப்பதிவு

புகார் குறித்து விசாரிப்பதற்காக கரூர் போலீசார் நடிகை ராணியைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது இல்லத்திற்குச் சென்று போலீசார் விசாரித்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. இதன் பிறகே நடிகை ராணி தலைமறைவாகி இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, நடிகை ராணி, அவரது கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த கரூர் போலீசார் அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.