சினிமா

'ஜனநாயகன்' படத்தின் பெயரை மாற்ற விஜய் திடீர் முடிவு ?

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் டிச 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகன் படத்தின் பெயரை மாற்றி புதிய டைட்டில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

'ஜனநாயகன்' படத்தின் பெயரை மாற்ற விஜய் திடீர் முடிவு ?
Jananayagan
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது கடைசி திரைப்படம் என்று கூறப்படும் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு மும்முரமாகத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைப்படி படத்தின் தலைப்பை மாற்றவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மலேசியாவில் நடைபெறும் பிரம்மாண்ட விழா

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் கவனம் செலுத்துவதால், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார். இதனால், எச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படமே அவரது கடைசிப் படமாகப் பார்க்கப்படுகிறது.

'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வழக்கமாகச் சென்னையில் நடத்தப்படும் இதுபோன்ற பெரிய நிகழ்வுகள், இந்த முறை ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் மலேசியாவில் நடத்தப் படக்குழு ஏற்பாடுகள் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் கடைசிப் படம் என்பதாலும், இந்தக் கட்டத்தில் அரசியல் குறித்தும் தனது எதிர்காலப் பயணம் குறித்தும் அவர் பேசப்போவதைக் கேட்பதற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

படத்தின் தலைப்பை மாற்றும் ஆலோசனைகள்

'ஜனநாயகன்' விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதாலும், இது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், படத்தின் தலைப்பு இன்னும் வீரியமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று த.வெ.க.வின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனும் இதே கருத்தை விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் பெயரை 'ஜனநாயகன்' படத்திற்குச் சூட்ட விஜய் முடிவு செய்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.