மாணவி வன்கொடுமை விவகாரம்.. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நிலையில் சீமான் கைது..!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டார்.

Dec 31, 2024 - 13:28
Dec 31, 2024 - 13:28
 0
மாணவி வன்கொடுமை விவகாரம்.. தடையை மீறி  ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நிலையில் சீமான் கைது..!
ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நிலையில் சீமான் கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால்  சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். போராட்டத்திற்காக முறையாக  காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்ட இடத்திற்கு வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். சீமான் கூறுகையில், பத்திரிகையாளர்களை கூட சந்திக்கவிடாமல் கைது செய்தால் எப்படி? எதற்கு போராட்டம் என்று சொல்லக்கூட மறுக்கிறார்கள் என்றும் அறவழியில் போராடுவதற்கு கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

 பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து மனு அளித்து இருந்தார். நேற்று விஜய் வெளியிட்ட கடிதத்தை, தவெகவினர் துண்டு பிரசுரங்களாக விநியோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இன்று சீமான் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், கட்சி தொண்டர்களும் கைது செய்யப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow