இளைஞர் கொலை.. நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. டிஜிபி உத்தரவு

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

Dec 22, 2024 - 13:33
 0
இளைஞர் கொலை.. நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. டிஜிபி உத்தரவு
சங்கர் ஜிவால்

திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞர், வழக்கு விசாரணைக்காக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு  வந்திருந்தார்.  அங்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை  சுற்றி வளைத்த போது,  தப்பித்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஓடியுள்ளார். 

மாயாண்டியை பின் தொடர்ந்து துரத்தி வந்த அந்த கும்பல் நீதிமன்ற வாயிலில், அவரை சரமாரியாக வெட்டியும், அவரது முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, தாமாக முன் வந்து வழக்கை  விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொல்லப்பட்டவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒரு குற்றவாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்ததாகவும் தெரிவித்தார். அப்போது, குற்றம் நடப்பதற்கு முன்பாகவே அதனை காவல்துறையினர் தடுக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே  போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார். இதனையடுத்து, திருநெல்வேலி சம்பவம் தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில், இச்சம்பத்தின் எதிரொலியாக  அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக பாதுகாப்பை போடவேண்டும், பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்காக துப்பாக்கி வைக்க வேண்டும். இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அனைத்து காவல்துறை அதிகாரிகளும் 23-ஆம் தேதிகுள் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow