தத்தெடுப்பு வார்த்தையை பயன்படுத்தவில்லை.. செய்திக்குறிப்பால் மாட்டிக்கொண்ட அன்பில் மகேஸ்?
500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்த அரசு செய்திக்குறிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுத்து தேவையான வசதிகளை மேம்படுத்த இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார் என்று வெளியான தகவல்களால், திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளே கண்டனங்களை தெரிவித்து, பரபரப்பாக அறிக்கை வெளியிட்டன. இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று இரவே தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் அரசகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அரசு பள்ளிகளை தத்து எடுப்பதாக ஒருபோதும் தாங்கள் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றும், அமைச்சரும் அப்படி குறிப்பிடவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருந்தார். இருந்தாலும் இந்த பிரச்சனை ஓயாத நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளிக்க கூடிய நிலை உருவானது.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், SSA நிதியை கொள்கைகளை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் பணத்தை வாங்க வேண்டாம் என தெரிவித்தவர் முதலமைச்சர். பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி சுமையை ஏற்றுள்ளது. தொடர்ச்சியாக தவறான செய்திகளை வெளியிட்டு ஒவ்வொரு முறை விளக்கம் அளித்து சோர்வடைகிறோம்.
பள்ளிக்கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகள், நாங்கள்தான் அவர்களை வளர்த்து எடுக்க வேண்டும். இதை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தத்தெடுப்பு என்ற ஒரு வார்த்தையை யாரும் பயன்படுத்தவில்லை. தானும் பயன்படுத்தவில்லை என்று உறுதியாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து தேவையான வசதிகளை செய்து தருவதாக குறிப்பிட்டுள்ள தனியார் பள்ளி சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தனியாரின் பங்கு உலகளவில் ஏதேன்ஸ் நகரிலிருந்து துவங்கி செயல்பட்டு வருகிறது. 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகளை தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்வோம் என்ற தீர்மானத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அன்பில் மகேஸ் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ‘தத்தெடுப்பு என்ற வார்த்தையை தாங்கள் பயன்படுத்தவே இல்லை’ என்று அன்பில் மகேஸ் சொன்ன நிலையில் அரசு செய்திக்குறிப்பால் அவர் மாட்டிக் கொண்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?