சென்னைவாசிகள் கவனத்துக்கு.. புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 15, 2024 - 13:52
 0
சென்னைவாசிகள் கவனத்துக்கு.. புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Chennai Suburban Train Service

சென்னை: தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே வேளையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு முதல் சிறப்பு ரயில் இன்று காலை 8.35 மணிக்கு புறப்படும். இதேபோல் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும் சிறப்பு ரயில் புறப்படும். புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தாம்பரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில்‘’தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.  

பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் சார்பில் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன’’என்று கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 23ம் தேதி புறநகர் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து இருந்தது. சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு என இரு மார்க்கத்திலும் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 1 மாதத்துக்கு பிறகே அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தான் புறநகர் ரயில் சேவை சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow