Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து... தீர்த்து வைத்த நடிகர் சங்கம்... அறிக்கை வெளியிட்ட தனுஷ்!

நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்த சம்பவம் முடிவுக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த நடிகர் சங்கத்துக்கு, தனுஷ் மனம் திறந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Sep 14, 2024 - 12:00
 0
Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து... தீர்த்து வைத்த நடிகர் சங்கம்... அறிக்கை வெளியிட்ட தனுஷ்!
நடிகர் சங்கத்துக்கு நன்றி சொன்ன தனுஷ்

சென்னை: நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதாவது அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்கவில்லை என, தனுஷ் மீது தேனாண்டாள் பிலிம்ஸ், 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் என்ற இந்த இரு தயாரிப்பு நிறுவனங்களும் குற்றம்சாட்டியிருந்தன. நீண்ட நாட்களாக இந்த பிரச்சினை ஒரு முடிவு இல்லாமல் சென்றுகொண்டே இருந்தது. இதனால், கடந்த ஜூலை மாதம் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்ட் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. 

ஒரு தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கும் தனுஷ், அவர்களது படங்களில் நடிக்காமல், மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. மேலும், தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதாகவும், அவர் நடிக்கும் புதிய படங்களைத் தொடங்குவதற்கு முன், அதன் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவு குறித்து நடிகர் சங்கத்துக்கு எதுவும் தெரியாது என கார்த்தி கூறியிருந்தார். இப்படி மாறி மாறி தனுஷ் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், நடிகர் சங்க நிர்வாகிகள் இதற்கு முடிவு கட்ட களமிறங்கினர். அதற்கு இப்போது தீர்வும் கிடைத்துள்ளது.  

அதன்படி, தனுஷ் ஏற்கனவே கமிட்டான தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதேபோல், பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை, வட்டியுடன் திருப்பி செலுத்த அவர் ஒப்புக்கொண்டுள்ளாராம். இந்நிலையில் இச்சம்பவங்கள் குறித்து நடிகர் தனுஷே அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், எனது தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் எழுப்பிய புகார்களை, தீர்க்க உதவிய தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். 

உங்கள் சரியான தலையீடு, நேர்மையான வழிகாட்டுதல், எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FEFSI) ஆகியவற்றுடன், தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் குறிப்பாக அங்கீகரிக்க விரும்புகிறேன். உங்கள் முயற்சிக்கு என் ஆழ்ந்த நன்றிகள். 

தங்களின் உதவி பொருட்டு 11/09/2024 அன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்லவிதமாக தொடங்க முடிந்தது. தங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்காக நாசர், கார்த்தி, விஷால், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல், தொழில்துறைக்கு ஒரு நேர்மறையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது. நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்த்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனால் இனிவரும் நாட்களில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எந்தவிதமான சிக்கல்களும் வராது என சொல்லப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow