அத்தி மரத்தில் உருவான கோழிகுத்தி ஶ்ரீவானமுட்டி பெருமாள்.. தரிசித்தால் நோய்கள் நீங்கும்!

கோழிக்குத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசனம் செய்தால் போதும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அத்திமரத்தினால் உருவான பெருமாள் என்பதால் இவரை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.

Aug 19, 2024 - 16:02
 0
அத்தி மரத்தில் உருவான கோழிகுத்தி ஶ்ரீவானமுட்டி பெருமாள்.. தரிசித்தால் நோய்கள் நீங்கும்!
Athi Tree Vanamutti Perumal Temple dharsan

மயிலாடுதுறை: அத்திமரமே பெருமாளாக இருக்கும் ஆலயம் மயிலாடுதுறை அருகே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கோழிகுத்தி என்னும் இடத்தில் உள்ளது. மூலவர் ஶ்ரீநிவாஸ பெருமாள் அவரைத்தான்  ஶ்ரீவானமுட்டி பெருமாள் என்றே அழைக்கின்றனர். உலகிலேயே இங்கு மட்டுமே நாம் ஒரே அத்திமரத்தில் செய்யப்பட்ட பெருமாளின் ரூபத்தை பார்க்கமுடியும். 12 அடி உயரத்தில் அத்தி மரத்தாலேயே நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ வானமுட்டி பெருமாள் திருவுருவச் சிலை பிப்பல்ல மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் தந்த ஸ்ரீநிவாச பெருமாள். 1400 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த திருக்கோயில் ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசித்தால் அமைதி, ஐஸ்வர்யம் மன திருப்தியை தரும் என்கின்றனர் பக்தர்கள். 

வானமுட்டி பெருமாளாக காட்சி தரும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு துணையாக ஸ்ரீ தயாலக்ஷ்மி தாயாரும் வீற்றிருக்கும் இத்திருக்கோயிலில் ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் சப்தஸ்வர ஹனுமார், இராமானுஜர், நர்த்தன கிருஷ்ணர் மற்றும் விஸ்வக்சேனர் ஆகியோர் சன்னதிகளும் உள்ளன.காஞ்சிபுரம் அத்திவரதர் போல் இல்லாமல் இப்பெருமாளை தினமும் வருடம் முழுவதும் பார்க்கலாம். இந்த ஆலயத்தின் புராண சிறப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.


அத்திமரத்தின் சிறப்புகள்:

அத்தி மர சிற்பங்களில் உரு ஏற்றப்பட்ட தெய்வங்கள், பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள தெய்வ சக்தியை ஈர்த்து உயிர்களுக்கு எளிதாக வாரி வழங்குவதில் முதன்மையானவை காஞ்சிபுரம் அத்திவரதர் அத்தி மரத்தினால் ஆனவர். மழையை ஈர்க்கும் மரம் அத்தி மரம்.பூமி வெப்பமாவதை தடுக்கும்.நிலத்தடிநீரை தக்க வைக்கும் மரம்.வருடத்தில் ஐந்து ஆறு முறை காய்க்கும் ஒரே மரம் அத்தி மட்டுமே.இதன் பழங்கள் பறவைகள் விலங்குகளுக்கு பெரும் விருந்து. ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ குணங்கள் கொண்ட ஒரே பழம். உலகில் எல்லா இடங்களிலும் வளரும் ஒரே மரம் அத்தி மட்டுமே.ஒரு ஊரில் ஆயிரம் அத்தி மரங்கள் இருந்தால் அங்கே பசி தாகம் என்பது எப்போதும் இருக்காதாம்.


தோல் நோய் நீங்கும்:

நிர்மலன் என்ற அரசன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். நோய் தீர்க்க வேண்டி மகா விஷ்ணுவை பிரார்த்தனை செய்தபொழுது அவருக்கு தரிசனம் தந்த விஷ்ணு பகவான் காவிரிக்கரையோரமாக செல்லும் பொழுது மார்க்க சகாயேசுவரர்  அருளால் இந்த சரும நோய் விலகும் திருத்தலத்தை அடையலாம் எனவும் அங்கு 48 தினங்கள் கோயில் குளத்தில் நீராடி பெருமாளை தரிசனம் செய்து வந்தால் நோய் வர காரணமாயிருந்த தோஷம் விலகி நோய் விலகும் என்று அருளினார். இறைவன் ஆணைப்படி அவர் காவிரியில் நீராடி எல்லா திருக்கோயில்களிலும் வழிபட்டு யாத்திரையை தொடர்ந்தார். அவர் மூவலூரில் சிவனை வழிபடும் போது மூலவர் ஶ்ரீமார்க்க சகாயேஸ்வரர் அவருக்கு வடக்கு பக்கமாக செல்ல வழி காட்டினார். மன்னரும் அங்கிருந்து வடக்கு திக்கில் சென்றார்.

அத்திமரமே பெருமாளாக மாறிய தலம்: 

வடக்கில் சென்று அவர் காவிரியில் நீராடி அருகில் இருக்கும் கிராமத்திற்கு வந்தார். இறைவனை வழிபடலானார். அங்கு இருந்த பெரிய அத்திமரத்தில் ஶ்ரீவிஷ்ணு அவருக்கு காட்சி தந்து மன்னரை அங்கேயே தங்க சொன்னார். மன்னரும் அங்கேயே அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அவரது மேனியிலிருந்த நோய் மறைந்தது. அந்த கிராமம்இன்று கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. இறைவன் "வான்முட்டி பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார். பின்காலத்தில் அம்மன்னர் தவவலிமையால் பிப்பல்ல மகரிஷி என்று அழைக்கப்படலானார். 


பிப்பல்ல மகரிஷிக்கு தரிசனம்: 

சனி காயத்ரி மந்திரத்தை உருவாக்கியவர் தான் பிப்பல்ல மகரிஷி. "கோடி ஹத்தி விமோசன புரம்" என்ற பெயர் மருவி கோழிக்குத்தி ஆனதாகவும் பிப்பல்லருக்கு நோய் நீங்கிய திருத்தலம் தான் கோழிக்குத்தியாக மாறியது. இக்கோயிலின் தீர்த்தத்தை விஸ்வ புஷ்கரணி என அழைக்கிறார்கள். கோயிலின் வலப்பக்கமுள்ளது புஷ்கரிணி. இதில் தினசரியும் குளித்து பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய் நொடிகளும் விலகும் என்பது நம்பிக்கை.

வான்முட்டி பெருமாள்:

ஹத்தி என்றால் கொலை பாபம் என்று பொருள். இங்கு சகல பாபங்களும் நிவர்த்தியாகும் என்பதால் இந்த புனிதமான தலம் "கோடி ஹத்தி" என்று வழங்கலாயிற்று, அதுவே மருவி இன்று "கோழிகுத்தி" என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் மன்னருக்கு விஸ்வரூப தரிசனம் தந்ததால் வானினும் மேலாக நின்றமையால் பெருமாளுக்கு "வான்முட்டி பெருமாள்" என்று பெயர் வந்தது.மஹாலக்ஷ்மி தாயார் மூலவரின் வலது மார்பில் வசிப்பதால் இங்கு தாயருக்கு தனி சன்னதி கிடையாது. ஶ்ரீபூமா தேவி கர்ப்பகிருகத்திலேயே பெருமாளுக்கு பக்கத்தில் அருள்பாலிக்கிறார். கர்ப்பகிருகத்தை ஒட்டி யோக நரசிம்மர் பக்த பிரஹல்லாதனை ஆசீர்வதித்த வண்ணம் காணப்படுகிறார். மூலவர் அத்திமரத்தினால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாது. உற்சவர் யோகநரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

அபயம் அளிக்கும்  வானமுட்டி பெருமாள்:

வேருடன் இருக்கும் அத்திமரத்தில் ஶ்ரீநிவாஸர் சதுர்புஜனாக எழுந்தருளி இருக்கிறார். நான்கு திருக்கரங்களில் பின் இரு திருக்கரங்களில் சங்கு, சுதர்ஸனம், வைத்துள்ளார். முன் இடது திருக்கரத்தில் கதையும், முன் வலது திருக்கரத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். பெருமாள் துளசி மாலை, பூணூல் மற்றும் பல ஆபரணங்கள் அணிந்துள்ளார். அவரது திருப்பாதங்கள் அத்திமரத்தின் வேரில் ஊன்றியிருக்கிறது. கோழிக்குத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் கோவிலுக்கு சென்று  ஶ்ரீநிவாஸரை தரிசனம் செய்தால் நமது  உடல் குறைகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow