குண்டும்-குழியுமான சாலை.. கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்.. மக்கள் வேதனை
குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த பசிலிக்குட்டை பகுதியில் உள்ள திருவண்ணாமலை மெயின் ரோட்டில் இருந்து விநாயகபுரம் வரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தார் சாலை போடப்பட்டது. இவ்வழியாக கோவிந்தன்வட்டம், புள்ளநரிவட்டம், சேலத்தார் வட்டம்,போயர்தெரு, சின்னராஜ் மங்கலம்,சௌவுலூர், விநாயகபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி- கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் பேருந்துக்கு செல்ல வேண்டும் என்றால் பசலிகுட்டை பகுதியில் உள்ள திருவண்ணாமலை மெயின் ரோட்டிற்கு தான் வரவேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் அந்த தார்சாலை மிகுந்த சேதம் அடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் மற்றும் பள்ளி,கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ- மாணவிகள் தினந்தோறும் மிகுந்த அவதிகுள்ளாகி வருகின்றனர்.
சாலையில் உள்ள பள்ளத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் காலணிகளை கழற்றி கையில் எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் அவ்வழியாக செல்லும் பொழுது மழைக்காலங்களில் சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள் தெரியாமல் தவறி சாலையில் விழுந்து எழுந்து செல்கின்றனர். விவசாய நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாகனத்தில் எடுத்து செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?