ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் விழா சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு கணக்கிட்டு தகுதியான 17,427 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திருவள்ளூரில் திமுக கூட்டணி வெற்றிபெற்றால் அடிக்கடி உங்களை வந்து சந்திப்பேன் என கூறினேன். நீங்கள் எனக்கு கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வாக்களித்தீர்கள் , இப்பொழுது உங்களுக்கு நான் உங்களுக்கு கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் நேரம் இது. அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன். மேலும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. வீடு ஒவ்வொருவரின் கனவு. 1970 குடிசை மாற்று வாரியத்தை தொடங்கியவர் கருணாநிதி. கட்டட அனுமதி வழங்குதல் முறையை தமிழகத்தில் முதல் முறையாகத் தொடங்கியவர் முதல்வர் ஸ்டாலின். பட்டா நம் மக்களின் உரிமை, நான் இதுவரை 20,000 பட்டாக்களை என் கைகளால் வழங்கியிருக்கிறேன்.
மகளிர் இலசவ பயணம் மூலம் 520 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 900 சேமிப்பு செய்யப்படுகிறது. பெண்கள் உரிமை தொகை மூலம் 1 கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பம் அளித்தும் நிதி உதவி வரவில்லை, அருகாமையில் இருப்பவருக்கு கிடைக்கிறது தங்களுக்கு கிடைக்கவில்லை என சில குறைகள் மற்றும் கோரிக்கைகள் உள்ளன. இதனை பரிசீலித்து தகுதி உள்ளவர்கள் அனைவருக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பர் என உறுதியாகக் கூறுகிறேன்” என்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சாம்சங் நிறுவன பன்னாட்டு நிறுவனத்திற்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு மாதமாக அவர்கள் போராடி வருகிறார்கள். முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். பன்னாட்டு நிறுவனம் என்பதால் அரசியல் இயக்கம் சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என அவர்கள் கூறி உள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனை அடுத்து நிகழ்ச்சி முடிந்து செல்லுகையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள ஆவடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஏற்கனவே இந்த மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை, மருந்து தட்டுபாடு என பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் இந்த ஆய்வு கவனம் பெற்றது.