குட்கா ஊழல்.. ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜரான டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் - விசாரணை தள்ளிவைப்பு

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.

Sep 9, 2024 - 13:14
Sep 9, 2024 - 19:15
 0
குட்கா ஊழல்.. ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜரான டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் - விசாரணை தள்ளிவைப்பு
gutkha scam former dgp dk rajedran and george

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கைப்பற்றினர்.

அப்போது தமிழக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்த ஊழல் சர்ச்சையில் சிக்கினர்.

குட்கா ஊழல் தொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு தமிழகஅரசு கடந்த ஆண்டு ஜூலையில் அனுமதி வழங்கியது. அதேபோல், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் தமிழக காவல்துறை டிஜிபிடி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகிய இருவரும் ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதால், அவர்கள் மீது வழக்கு தொடரவும், விசாரணை நடத்தவும் மத்திய உள்துறைஅமைச்சகத்திடம் சிபிஐ அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு சிபிஐக்கு பதில் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜார்ஜ் மற்றும் டி.கே.ராஜேந்திரன் மீது வழக்கு தொடர்ந்து, விசாரணை நடத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிபிஐ சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.இதனையடுத்து தமிழக முன்னாள் டிஜிபி டி.கே ராஜேந்திரன் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரிடம் சிபிஐ வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால், பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர், பிழைகளை திருத்தம் செய்து கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே உள்ள ஆறு பேருடன் புதிதாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து தாக்கல் செய்தது.

அதில் ஆர்.சேஷாத்ரி, குல்சார் பேகம், அனீஷ் உபாத்யாய், வி.ராமநாதன், ஜோஸ் தாமஸ், பி.செந்தில்வேலவன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, வி.எஸ்.கிருஞ்சிச்செல்வன், எஸ்.கணேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர், அ.சரவணன், டாக்டர்.லக்ஷ்மி நாராயணன், பி.முருகன், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழ்நாடு அரசின் முன்னாள் காவல்துறை தலைவர் (டிஜிபி) டி.கே.ராஜேந்திரன், வி.கார்த்திகேயன், ஆர்.மன்னரமணன், வி.சம்பத், ஏ.மனோகர், அ.பழனி, கே.ஆர்.ராஜேந்திரன் ஆகிய 21 பேர் மீது குற்றப்பத்திரிகையில் கூடுதலாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் மற்றும் தற்போதய  எம்எல்ஏக்கள் உள்ளதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனையடுத்து எம்பி, எம்எல்ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன் இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்  விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் ஆஜராகினர். 

இதனையடுத்து நீதிபதி கூறியதாவது, இவ்வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது கூடுதலாக நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவருக்கும் சம்மன் அனுப்புவதாகவும், அவர்கள் அனைவரும் செப்டம்பர் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு சம்மன்களை சிபிஐ காவல்துறை வழங்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

நீதிபதியின் உத்தரவினை அடுத்து குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.அதன்படி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இதனையடுத்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜார்ஜ் மற்றும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் ஆஜராகினர். கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதால் இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow