காலியான ஈரோடு கிழக்கு தொகுதி.. பிப்ரவரியில் மீண்டும் இடைத்தேர்தல்?

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம்  இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dec 17, 2024 - 15:13
Dec 17, 2024 - 15:15
 0
காலியான ஈரோடு கிழக்கு தொகுதி.. பிப்ரவரியில் மீண்டும் இடைத்தேர்தல்?
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம்  இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் தனது தந்தை  ஈவிகே சம்பத்தின் மரணத்திற்கு பிறகு,  காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.  இளங்கோவன், திரையுலக நடிகரும், ஈவிகே சம்பத்தின் நண்பருமான சிவாஜி கணேசனுடன் ஒன்றாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார்.

கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகிய சிவாஜி, தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் இணைந்தார். பின்னர் சிவாஜி  தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்துவிட்டார். இதனால்,  ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது தாய் கட்சியான காங்கிரஸிலேயே மீண்டும் இணைந்தார்.

இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய இணை அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன், திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா உயிரிழந்தார். 

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இவர் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தல் உடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow