சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். ஈ.சி.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம்பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு பல்லாவரம் பகுதியில் உள்ள ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தார். அப்போது அதே ஜிம்மில் மணிபாலன் என்பவர் சேர்ந்து உடற் பயிற்சி செய்து வந்தார். அப்போது இளம்பெண்ணுடன் மணிபாலன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
திடீரென மணிபாலன், உன்னை நான் காதலிக்கிறேன், உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன் எனவும் ஏற்கனவே நான் காதலித்த பெண் என்னிடம் உண்மையாக இல்லை, எனக்கு அந்தப் பெண் வேண்டாம். உன்னை நான் உயிருக்கு உயிராக காதலிக்கின்றேன் நீ இல்லையென்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என தெரிவித்து அந்த இளம்பெண்ணை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டரை வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். அப்போது சிறுக, சிறுக இளம்பெண்ணிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் வரை பணத்தை மணிபாலன் வாங்கியுள்ளார். அதன் பின்னர் இருவரும் தனிமையில் இருந்தபோது அந்த இளம்பெண் கருவுற்றதாக கூறப்படுகிறது. இதை மணிபாலனிடம் தெரிவித்ததும், இப்பொழுது நமக்கு குழந்தை வேண்டாம் ஒரு சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டு நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் கடந்த 21.2.2024 அன்று குன்றத்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று இரு வீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் பல இடங்களில் தேனிலவுக்கு சென்று விட்டு திரும்பினார். மீண்டும் கரு கலைக்கும் மாத்திரை வாங்கிவிட்டு கருவை கலைத்து உள்ளார்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து திடீரென திவ்யாவிடம், ‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நீயும் நானும் வெவ்வேறு ஜாதி. அதனால் நமது திருமணத்தை எங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என கூறி பழைய காதலியே திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறி திவ்யாவின் தொடர்பை துண்டித்ததோடு தொலைபேசி எண்ணை பிளாக் செய்து விட்டார். இதனால், செய்வதறியாது திகைக்க இளம்பெண் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.
அதன் பின்னர், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டு, போலித் திருமணமும் செய்து, தன்னுடன் வாழாமல் முன்னாள் காதலியை திருமணம் செய்துகொள்ள போவதால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என இளம்பெண் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பலமுறை காவல் நிலையம் சென்று தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். மேலும், சங்கர் நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் ரூ.20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜிம்மில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி உல்லாசமாக இருந்துவிட்டு 19 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு திருமணமும் செய்து கொண்டு சேர்ந்து வாழ மறுத்து வேறு பெண்ணை வரும் 5.9.2024 அன்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் திருமணத்தை நிறுத்தி தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.