பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

Jan 8, 2025 - 12:52
Jan 8, 2025 - 12:55
 0
பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை  சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,  பல்கலைக்கழக பெயரை இந்த விவகாரத்தில் பயன்படுத்தி அந்த பெயரை நான் களங்கப்படுத்த விரும்பவில்லை. பல்கலைக்கழகத்தில் நடந்திருப்பது மாபெரும் கொடூரம். இது குறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசுகிறார்கள். ஒரு உறுப்பினர் ஆட்சி மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதை தவிர வேறு எந்த நோக்கமும் தமிழக அரசுக்கு இல்லை. மாணவி வழக்கில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்த பின்னரும் முதல் தகவல் அறிக்கை கசிந்தது குறித்து குறை சொல்கின்றனர். ஆனால், அதற்கு காரணம் தேசிய தகவல் மையம் தான். இது தொடர்பாக அந்த அமைப்பும் விளக்கம் கொடுத்திருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பில்லை, கேமிரா இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. கண்காணிப்பு கேமிரா உதவியோடுதான் குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். யார் அந்த சார் என கேட்கிறீர்கள்? சிறப்பு புலனாய்வுக் குழு தான் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்கிறார்கள். இந்த புலன் விசாரணையில் வேறு குற்றவாளிகள் இருப்பது தெரிய வந்தால் யாராக இருந்தாலும்  காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நூறு சதவிகிதம் உறுதியோடு சொல்கிறேன்.

மாணவி வழக்கு தொடர்பாக 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையின் மூலம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் அந்த சார் ? என்று கேட்கிறீர்கள். உண்மையாகவே எதிர்க்கட்சியிடம் ஆதாரம் இருந்தால் புலனாய்வு குழுவிடம் சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு மாணவிக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும். இது மக்கள் மத்தியில் எடுபடாது. மனசாட்சி இல்லாமல் பெண்களின் பாதுகாப்பாளர்கள் போல பேசுபவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  சிபிஐ விசாரணையில் பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டதாக தெளிவாக சொல்லிவிட்டனர். 

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி தான். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்.  இதுபோன்ற 100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னாலும் கேட்க முடியும். அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும். குற்றவாளி எந்த பின்னணியை சேர்ந்தவராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திராவிட மாடல் ஆட்சி மகளிர்க்கான ஆட்சி.

அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் என்பவரை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வழக்குப்பதிவு செய்து அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 103-வது அதிமுக வட்ட செயலாளர் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழக குற்றவாளி ஞானசேகரன் திமுகவில் உறுப்பினர் அல்ல. ஆனால் அவர் திமுகவினுடைய ஆதரவாளர் என்பதை நான் மறுக்கவிக்லை. அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம் தவறு இல்லை. அவர் திமுகவின் அனுதாபி. திமுகவினராக இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுத்திருப்பேன். குற்றவாளியை நாங்கள் காப்பாற்றவில்லை என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow