விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

விதிமீறி கட்டப்பட்டுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Dec 23, 2024 - 18:26
 0
விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை கொளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, தரைதளம் மற்றும் முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி பெற்ற நிலையில், அனுமதியில்லாமல் தரைதளம் மற்றும் மூன்று தளங்களை கட்டியுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பாக பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பள்ளி நிர்வாகம் தரப்பில், பள்ளியில் 1,500 மாணவர்கள் படித்து வருவதால் கருணை காட்ட வேண்டும் எனவும், சென்னை தியாகராய நகரில் ஏராளமான விதிமீறல் கட்டிடங்கள் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

தியாகராய நகரில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காதது, அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் விதிமீறல் செய்தால், அது விதிமீறல் தான் எனவும், இவற்றுக்கு இரக்கம் காட்ட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அதேசமயம், கல்வியாண்டு முடிவடையும் 2025ம் ஆண்டு ஏப்ரல் வரை பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த அளவுக்கு மட்டுமே இரக்கம் காட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow