மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிக்கொலை!

Instagram Reels Issue in Madurai : மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sep 26, 2024 - 16:03
Sep 26, 2024 - 16:58
 0
மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிக்கொலை!
Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிக்கொலை!

Instagram Reels Issue in Madurai : மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 1-ஆவது தெரு பகுதியை சேர்ந்த சூர்யா (23) என்ற இளைஞர் தனது தந்தை முருகனுடன் சேர்ந்து டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சூர்யாவின் நண்பர்களான தேன்ராஜ் பாண்டியன், விஷ்ணுகுமார். சரவணப்பாண்டி, அமர்நாத், கார்த்திக்பிரியன், ஹரிஹரபாண்டி ஆகியோருக்கும், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரவின்ராஜா, ராஜேஷ், ராஜா, ஜலாலுதீன் என்ற காட்டுப்பூனை, தக்காளிகார்த்திக் மாப்பிள்ளை, கார்த்திக், லிங்கராஜா, மாதேஷ் ஆகியோருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக தெருவிற்குள் யார் பெரிய ஆள்.? என்பதிலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக Instagram-ல் யாரு பெரிய ஆள்…? என மோதிப்பார்க்கலாம்.! விரைவில் சந்திப்போம் எனவும், பல்வேறு வசனங்களை  வைத்து ஸ்டோரியில் பதிவுகளை பதிவிட்டும் ரீல்ஸ்சும் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ஜீவாநகர் 1வது தெரு பகுதியில் நின்றுகொண்டிருந்த பிரவின்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் Instagram ல எங்களுக்கு எதிராக STATUS போடுவியாடா.! எனக் கூறி மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து சூர்யாவின் கையில் வெட்டியுள்ளனர். பின்னர் சூர்யா தப்பியோட முயன்றபோது அவரை துரத்தி தலை, கால், கை என மாறி மாறி வெட்டியுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தடுத்தபோது வெட்டிவிட்டு இன்னைக்கு தப்பிச்சிட்ட.! என்னைக்கு இருந்தாலும் உன் சாவு எங்க கையில்தான் என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து சூர்யாவின் பெற்றோர் சூர்யாவை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதையடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் சூர்யாவை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்ததாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவின் கீழ் பிரவின்ராஜா, ஜலாலுதீன் (எ) காட்டுப்பூனை, லிங்கராஜா, மாதேஷ், சோமசுந்தரம், முகேஷ்குமார், சதிஸ்குமார் மற்றும் ஒரு சிறுவன் என 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். மதுரையில் யார் பெரிய ஆள்.? என்பதற்காக INSTAGRAM மூலமாக ஏற்பட்ட ரீல்ஸ், ஸ்டோரி மற்றும் வார்த்தை மோதலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: “சாட்சிகளை தொடர்புகொள்ளக் கூடாது..” செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனைகள் என்னென்ன?

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மோதலை தூண்டும் வகையில் மிரட்டல் விடுக்கும் வகையிலும் வீடியோ பதிவுகள் மற்றும் ஸ்டேட்டஸ் பதிவுகள் பதிவிடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் இரு தரப்பு மோதலா.? அல்லது ஜாதிய ரீதியான ஏதேனும் இரு பிரிவுகளாக பதிவு செய்து மோதல் ஏற்பட்டதா.? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் செல்போன்களை கைப்பற்றி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow