உன்னால தான் என் வாழ்க்கை போச்சு.. பட்டப்பகலில் வங்கி ஊழியரை தாக்கிய நபர்
சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிப்புரியும் ஊழியரை தனிநபர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் - சதீஷ் என்ற இருவர் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிப்புரிந்து வந்துள்ளனர். அங்கு தினேஷ் சேல்ஸ் மேனேஜராகவும், சதீஷ் சேல்ஸ் பிரிவு ஊழியராவும் பணியாற்றியுள்ளனர். சதீஷை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நன்னடத்தை விதிமீறல் காரணமாக பணியில் இருந்து தினேஷ் நீக்கி உள்ளனர். தனது வேலை பறிபோனதற்கு காரணம் தினேஷ் தான் என நினைத்து அவரை கடந்த பல மாதங்களாக சதீஷ் தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில், தியாகராய நகர் பர்க்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் தினேஷ் பணிப்புரிந்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த சதீஷ் கடந்த சில மாதங்களாக அந்த வங்கியை கண்காணித்து வந்துள்ளார். இன்று மதியம் வங்கிக்குள் வாடிக்கையாளர் போன்று நுழைந்த சதீஷ், தினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார். "உன்னால தாண்டா என் வாழ்க்கை வீணா போச்சு" என கத்தியபடியே சதீஷ், தினேஷை வெட்டிவிட்டு கதறி அழுது அங்கேயே நின்றிருந்த நிலையில் வங்கி ஊழியர்கள் அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் வங்கி ஊழியர் தினேஷிற்கு காது வெட்டப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சதீஷிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சதீஷ், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பட்டப் பகலில் தனி நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து வங்கி ஊழியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?