வீட்டு உரிமையாளருடன் தகராறு.. தலைக்கேறிய மதுபோதை.. வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் மது போதையில் ஐந்து இருசக்கர வாகனங்களை தீவைத்து எரித்த வாடகைத்தாரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்து பகுதியில் வசிப்பவர் வினோத். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடராஜ் என்பவர் தனது மனைவி சாந்தியுடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடராஜின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் மனைவி இறந்த துக்கம் தாளாமல் நடராஜ் அன்றிலிருந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் ரகளை செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் வினோத் வாடகைக்கு குடியிருக்கும் நடராஜை கண்டித்ததுடன் வீட்டை காலி செய்யமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜ் நேற்று வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்து ரகளையில் ஈடுபட்டதை வீட்டின் உரிமையாளர் வினோத் கண்டித்து விட்டு தூங்க சென்றுள்ளார்.
அப்போது மதுபோதை தலைக்கேறிய நடராஜ், வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த வினோத்துக்கு சொந்தமான இருசக்கர வாகனகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். இதில் ஐந்து வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததை பார்த்து ஓடிவந்த வினோத் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றதுடன் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சில மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மூன்று இருசக்கர வாகனங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானது. பின்னர், இது குறித்து வீட்டின் உரிமையாளர் வினோத் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மதுபோதையில் இருசக்கர வாகனங்களை தீவைத்து கொளுத்திய நடராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?