அரசியல்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!
தமிழக பாஜக தலைவருக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்றக்குழுத்தலைவருமான நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு எதிராக யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில், ஒருமனதாக பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, வானகரத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பாஜக முன்னாள் மாநில அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சூளுரை செய்திருந்த முன்னாள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க, காலில் செருப்பு அணிந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவுடனான பாஜக கூட்டணி, பாஜக மாநில தலைவர் பதவியேற்பு விழா போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு இன்று காலை தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, டெல்லிக்கு விரைந்துள்ளார். இன்று காலை 8:30 மணி அளவில் டெல்லி செல்லும் விமானத்தில் செல்வதற்காக, இன்று காலை 7:40 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இன்று டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருப்பதாகவும், தேசிய பாஜகவில் அண்ணாமலைக்கு முக்கியப்பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.