லேட்டரல் என்ட்ரி ரத்து.. எதிர்கட்சியினர் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு.. யுபிஎஸ்சிக்கு கடிதம்

லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நியாயமான சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Aug 20, 2024 - 14:58
Aug 21, 2024 - 10:16
 0
லேட்டரல் என்ட்ரி ரத்து.. எதிர்கட்சியினர் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு.. யுபிஎஸ்சிக்கு கடிதம்
centre asks upsc chairperson to cancel lateral entry in bureaucracy

லேட்டரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப் பணிகளை நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை ரத்து செய்யும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.


மத்திய அரசின் இணைச்செயலாளர், துணைச்செயலாளர், இயக்குநர் என்ற அதிகாரம் மிகுந்த பதவிகளுக்கு அனுபவம் வாய்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது 70 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையாக இருந்தவந்தது. மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, லேட்டரல் என்ட்ரி’ என்ற பெயரில் அரசுப் பணியில் இல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை நியமிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

மத்திய அரசின் கொள்கைகளை உருவாக்குவது உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை இணைச் செயலாளர்கள் மேற்கொள்வார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கு லேட்டரல் என்ட்ரி மூலமாக அவுட்சோர்சிங் போன்ற முறையில் வெளிநபர்களை அரசு எந்திரத்துக்குள் கொண்டுவரும் நிலைமை உருவானது குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர். 

ஐஏஎஸ் என்ற முறையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலையை மோடி அரசு செய்கிறது என்ற எதிர்ப்பும் கிளம்பியது.லேட்டரல் என்ட்ரி முறைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. மத்திய அரசில் அதிகாரமிக்க பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட நபர்கள் திணிக்கப்படுவதாகவும், உயர் பதவிகளில் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதி வேலைகளில் மோடி அரசு ஈடுபட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘யுபிஎஸ்சிக்கு பதிலாக ஆர்எஸ்எஸ் மூலமாக அரசு ஊழியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அரசியலமைப்பை பிரதமர் மோடி தாக்குகிறார் என்று விமர்சித்திருக்கிறார்.லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நியாயமான சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். “சமூக நீதியை நிலைநாட்டவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும். லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும்.

மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும். தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற ‘கிரீமிலேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கிரீமிலேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குனர்கள் உள்ளிட்ட நிலைகளில் தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதனிடையே எதிர்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்துள்ளது. லேட்ரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப் பணிகளை நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து யுபிஎஸ்சி தலைவர் ப்ரீத்தி சூடானுக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 2005ஆம் ஆண்டு வீரப்ப மொய்லி தலைமையிலான குழு, லேட்ரல் என்ட்ரி முறையை அங்கீகரித்தது. 2013ஆம் ஆண்டு 6ஆவது நிதி ஆயோக் கூட்டத்திலும் இது உறுதி செய்யப்பட்டது. எனினும் இதற்கு முன்பும் பின்பும் ஏராளமான உயர் பதவிகள், லேட்ரல் என்ட்ரி மூலம் நிரப்பப்பட்டன. கடந்த கால அரசாங்கத்தில் யுஐடிஏஐ தலைமை உள்ளிட்ட பொறுப்புகள் இவ்வாறே நிரப்பப்பட்டன. 

எனினும் வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யுபிஎஸ்சி அண்மையில் வெளியிட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பில் இத்தகைய இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், அந்த விளம்பரத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்துகிறேன் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow