உலகம்

அன்பே சிவம்: இளசுங்க மத்தியில் ட்ரெண்டாகும் ‘நட்பு திருமணம்’.. என்ன அது?

சீனாவில் சமீப காலமாக ‘நட்பு திருமணம்’ பிரபலமடைந்து வருவதால் இளசுகள் உற்சாகத்தில் உள்ளனர்.

அன்பே சிவம்: இளசுங்க மத்தியில் ட்ரெண்டாகும் ‘நட்பு திருமணம்’.. என்ன அது?
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த இளைஞர்களிடம் ‘எப்போ கல்யாணம்’ என்ற கேள்வி கனையை அனைவரும் தொடுக்கின்றனர். 25 வயதை நெருங்கிவிட்டால் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று இளைஞர்களுக்கு சமூகம் அழுத்தத்தை கொடுக்கிறது. இதனை தவிர்ப்பதற்காக இளைஞர்கள் பலர் வெளியூர்களில் சென்று வேலை செய்தும் படித்தும் வருகின்றனர்.

ஆனால், இது நிரந்தர தீர்வாக இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் திருமணம் செய்தாலும் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விருப்பத்திற்கு மாறாக துணையின் செயல் இருப்பின் சற்றும் யோசிக்காமல் விவாகரத்து நோக்கி நகர்கிறது இன்றைய திருமணம்.

நட்பு திருமணம்

இந்நிலையில், சீனாவில் சமீப காலமாக “நட்பு திருமணம்” (Friendship marriage) என்பது பிரபலமடைந்து வருகிறது. ஜப்பானில் இது புதிய கலாச்சாரம் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் இருப்பதுதான். இதற்காக தனி ஏஜென்ஸியே செயல்பட்டு வருகிறது. சீனாவில் இந்த நட்பு கல்யாணம் தற்போது பிரபலமடைந்துள்ளது.

நட்பு திருமணம் முறையில், தம்மை நன்றாக புரிந்துக்கொண்ட நல்ல நண்பர்களை திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களின் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். ஒரே வீட்டில் வசிப்பார்கள். ஆனால் தனித்தனி அறையை பயன்படுத்திக் கொள்வார்கள். இருவரும் செலவுகளை பங்கிட்டு கொள்வார்கள்.

இதில் ஒரு டுவிஸ்ட் என்ன என்றால் இவர்களுக்குள் அன்பு இருக்கும் உடலுறவு இருக்காது. நட்பு கல்யாணத்தில் உள்ளவர்கள், தாங்கள் விரும்பும் மற்ற நபருடன் டேட்டிங் செய்தும் கொள்ளலாம். ஒருவேளை குழந்தை பெற திட்டமிட்டால் செயற்கை கருவூட்டல் வழியாகவோ அல்லது தத்தெடுப்பு முறையின் மூலம் குழந்தையை தத்தெடுப்பார்கள்.

நட்பு திருமணத்திற்கு ஆதரவு

இந்த திருமணம் குறித்து சீனாவின் இளைய தலைமுறையினர் பேசியதாவது, “சட்டத்தின் படி நான் திருமணம் ஆனவன். இந்த சமூகம் என்னை நோக்கி எப்போதும் திருமணம் குறித்த கேள்வி எழுப்பாது. நீண்ட வருடங்களாக திருமணம் செய்யாமல் இருக்கும் போது என் நடத்தையினை இந்த சமூகம் கேள்விக்குள்ளாக்குகிறது. நட்பு திருமணம் முறையினால் இது கொஞ்சம் குறைகிறது. இதையெல்லாம் தாண்டி நான் இந்த உறவு முறையில் சுதந்திரத்துடன் இருக்க என்னால் முடிகிறது” என தெரிவித்துள்ளனர்.