உலகம்

அமெரிக்காவில் கொடூரம்.. சண்டையை தடுக்க முயன்ற இந்திய வம்சாவளி சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் உணவகம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் கொடூரம்.. சண்டையை தடுக்க முயன்ற இந்திய வம்சாவளி சுட்டுக்கொலை!
Indian-origin man shot dead
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவகம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் (51) என்பவர், தனது கடைக்கு வெளியே நடந்த சண்டையை விலக்கிவிட முயன்றபோது, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தப்பி ஓடிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

சண்டையும் துப்பாக்கிச்சூடும்

பிட்ஸ்பர்க் நகரில் ராகேஷ் ஏகபன் உணவகம் நடத்தி வந்தார். அவரது உணவகத்துக்கு வெளியே திடீரென இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சண்டையாக மாறியுள்ளது. இதைக் கண்ட ராகேஷ் ஏகபன், சண்டையை விலக்கிவிட முயற்சித்துள்ளார்.

அப்போது, சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்களில் ஒருவரான ஸ்டான்லி யூஜின் (37), ராகேஷ் ஏகபனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இந்தச் சம்பவம் உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

துப்பாக்கிச் சண்டையில் கொலையாளி கைது

ராகேஷை சுட்ட பிறகு, ஸ்டான்லி யூஜின் அங்கிருந்த ஒரு வேனில் ஏறித் தப்பிச் சென்றுள்ளார். வேனின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்த போலீசார், வெஸ்ட்டைத் தேடிச் சென்றனர். போலீசாரை கண்டதும் வெஸ்ட் வேனில் இருந்து இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தவே, போலீசாரும் பதிலுக்குத் தாக்குதல் நடத்தினர்.

இந்தச் சண்டையில் குற்றவாளி ஸ்டான்லி யூஜினும், ஒரு போலீஸ் அதிகாரியும் காயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி யூஜின் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி யூஜின் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மோதலுக்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.