உலகம்

"நோபல் பரிசை அதிர்பர் டிரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன்"- மரியா மச்சாடோ அறிவிப்பு!

தனது அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.


Maria Machado and Trump
நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ, தான் வென்ற பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பரிசுக்கான பின்னணி

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகப் போராடியதற்காகவே, மரியா கொரினா மச்சாடோவுக்கு நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் பரிசுக் குழு அறிவித்தது.

உலகளவில் நடைபெற்று வந்த 8-க்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாகத் தொடர்ந்து கூறிவந்த டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மரியா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்புக்கு அர்ப்பணித்த காரணம்

நோபல் பரிசு வென்ற மரியா மச்சாடோ இது தொடர்பாகத் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

"அனைத்து வெனிசுவேலா மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், சுதந்திரத்தை வெல்வது என்ற எங்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஊக்கமாகும். நாம் இன்று வெற்றியின் வாயிலில் இருக்கிறோம். இன்று, எப்போதையும்விட அதிகமாக, சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக குடியரசு நாடுகளை எங்களின் முக்கியக் கூட்டாளிகளாகக் கருதுகிறோம்.

இந்தப் பரிசை வெனிசுவேலாவில் பாதிக்கப்பட்டு வரும் மக்களும், எங்களின் போராட்டத்துக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.